Thursday 19 April 2018

ஆசிஃபா பானு! பலாத்காரம் செய்யப்பட்ட மனசாட்சி!!!


ஆசிஃபா பானு!
பலாத்காரம் செய்யப்பட்ட மனசாட்சி!!!




ஜஸ்டிஸ் ஃபார் ஆசிஃபா “JUSTICE FOR ASIFA”  இது தற்போது இந்திய தேசத்தின் பட்டி தொட்டிகளை எல்லாம் தாண்டி சர்வதேச அளவில் ஒலித்துக் கொண்டிருக்கும் நீதிக்கான குரலாகும்.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய தேசத்தில் நீதிக்கான ஆதரவுக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத்தொடங்கி இருக்கின்றன.

ஆசிஃபா பானு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி என்பதற்காக மட்டுமே பலியாக்கப்பட்டிருக்கிறாள்.

இந்த தேசத்தில் முஸ்லிமாக நீ இருக்கின்றாயா? இந்தா உனக்கு மரண தண்டனை என்கிறது நீதிமன்றம்.

முஸ்லிமாக நீ இருக்கின்றாயா? அப்படியென்றால் நீ தீவிரவாதி என்கிறது காவல்துறை.

முஸ்லிமாக நீ இருக்கின்றாயா? அப்படியானால் நீ பயங்கரவாதி, தேசவிரோதி என்கிறது ஊடகம்.

முஸ்லிம் பெண்ணாக நீ இருக்கின்றாயா? முக்காடை விலக்கு, முகத்திரையை அகற்று என்கிறது பேனா முனைகளும் முற்போக்கு சிந்தனைகளும்.

முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணா? உன் குழந்தை வாழத்தகுதியற்றது என்று கூறி வயிற்றைக் கிழித்து சூலாயுதத்தால் குத்திக் கிழிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

முஸ்லிம் சிறுமியா? கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொல்கிறது சங்கப் பரிவாரமும், காவிக்கும்பல்களும்…

பிறந்தாலும் மரணம், கருவில் இருந்தாலும் மரணம், வளர்ந்து நடமாடினாலும் மரணம், வாழ்ந்தாலும் மரணம் இது தான் இன்றைய இந்திய ( மோடி & கோ ) தேசத்தில் சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தின் நிலை.

தேசத்தின் மனசாட்சி ஆசிஃபா…

ஜம்மு கஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டம் ரசானா கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது யூசுஃப் புஜ்வாலா, நஸீமா தம்பதியரின் 8 வயது மகள் ஆசிஃபா காணாமல் போகின்றார் 10/01/2018 அன்று.

குதிரை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற இடத்தில் ஆசிஃபாவை காணவில்லை என போலீஸில் புகார் அளித்தார் ஆசிஃபாவின் தந்தை யூசுஃப் 12/01/2018 அன்று.

இந்நிலையில் காணாமல் போன 7 ( 19/01/2018 ) நாட்களுக்குப் பிறகு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும், சிறுமியை கற்பழித்த விவகாரத்தில் தொடர்புடைய காவிக் கும்பலிடம் 1.50 லட்சம் லஞ்சமாகப் பெற்று உள்ளூர் காவல்துறை வழக்கை மூடி மறைக்க திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து பெற்றோர்களின் கடுமையான போராட்டம் காரணமாக இந்த விவகாரம் ஜம்மு கஷ்மீர் மாநில குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டு 8 காவி குண்டர்களை கைது செய்துள்ளது.

இந்த 8 பேர்களில் 60 வயதான ராம் என்கிற காமக்கொடூரன் காளி தேவி கோவிலின் தலைமை பூசாரியாவான். அவனே தலைமை தாங்கி, துவக்கி வைத்து, அதற்கு துணையாக தனது மகனையும் இணைத்துள்ளான்.

சிறுமியை கடத்திச் சென்றி, கோவிலில் அடைத்து வைத்து மயக்கமருந்து கொடுத்து தொடர்ச்சியாக 8 நாட்கள் கொடூரமாக கற்பழித்து சிறுமியின் முகத்தில் கல்லால் அடித்து கொன்றிருக்கின்றனர்.

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் இந்த வழக்கை விசாரித்த காவல் துறை அதிகாரியும் ஆசிஃபாவை கற்பழித்தது தான்.

பகர்வால் எனும் மேய்ப்பர் சமூகத்தைச் சேர்ந்த இந்த முஸ்லிம் சிறுபான்மை மக்களை ரசானா கிராமத்தை விட்டே துரத்த வேண்டும் என்கிற முயற்சியில் அந்த ஊரின் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் சங்கப்பரிவாரக் கும்பல்கள் தொடர்ந்து முயற்சி செய்து இறுதி கட்ட முயற்சியாக இந்த வன்புணர்வு முயற்சியைக் கையில் எடுத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன் பின்னர் மாநில குற்றப்பிரிவு போலீஸார் கத்துவா மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முனைந்த போது, கத்துவா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன்  வழக்குறைஞர்கள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய விடாமல் தடுத்திருக்கின்றனர்.

அதே நாளில், பாஜக, மற்றும் சங்கப்பபரிவாரக்கும்பல்கள் இணைந்து 8 காமக் கொடூரர்களின் கைதைக் கண்டித்து பெரிய போராட்டங்களை நடத்தினர்.

அதில் மாநில வனத்துறை மந்திரி லால் சிங் மற்றும் தொழிற்சாலைகள் துறை மந்திரி சந்தர் பிரகாஷ் கங்கா ஆகிய பா.ஜனதா மந்திரிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற சிலர் தேசியக்கொடிகளை ஏந்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பின்னரே கள்ள மௌனம் பூண்டிருந்த ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன.

சிறுமி கற்பழிப்பு மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அனைத்தும் தற்போது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், பிரபலங்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என நாட்டு மக்கள் அனைவரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சிறுமி கற்பழிப்பு விவகாரத்தை விசாரிக்க தனிக்கோர்ட்டு அமைக்க முதலமைச்சர் மெகபூபா முப்தி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘சிறுமி கற்பழிப்பு வழக்கை விசாரிக்க சிறப்பு விரைவு கோர்ட்டு அமைக்க வேண்டும். அதில் 90 நாட்களுக்குள் விசாரணை முடித்து, மாநிலத்திலேயே விரைவாக நீதி வழங்கப்பட்ட கோர்ட்டாக அது அமைய வேண்டும்என கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதைப்போல சிறுமி ஆசிஃபா கற்பழிப்பு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசாரை பணிநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணியில் பங்கெடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ள பா.ஜனதா மந்திரிகள் இருவரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

வழக்கமாக, தமிழகத்தில் உளரித்தள்ளும், உச்ச நீதிமன்ற நிதிபதியால் மனநல  பரிசோதனை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்ட எச்ச ராஜா –வும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக உளரியுள்ளார். அதை முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக தளங்களிலே காண முடிந்தது.

90 நாட்களுக்குள் இந்த விவகாரத்தின் முடிவு நாட்டு மக்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தெரியவந்து விடும்.

நீதிமன்றங்களின் நிலையும்... நீதிபதிகளின் நிலையும்...

சமீபத்தில் நாட்டின் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஊடகத்தை அழைத்து கொடுத்த பேட்டியின் போது ”இன்னின்ன வழக்குகளுக்கு இன்னின்னவர்கள் தான் நீதிபதியாக இருக்க வேண்டும்” என்று அழுத்தம் தரப்படுகின்றது.

 வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதும், முன்னரே சொல்லப்பட வேண்டிய தீர்ப்பை தாமதப்படுத்தி சொல்வதும் சிலரின் வற்புறுத்தலால் நடந்து வருவதாக கூறினார்கள்.

மேலும், முன்பெல்லாம் நீதிபதிகள் தீர்ப்பெழுதிய பிறகு பேனாவை முறிப்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் பதவியை ராஜினாமா செய்கின்றார்கள்.

ஆக இந்த விவகாரத்தில் வலிமையான முறையில் மத்திய அரசுக்கு அழுத்தங்களை கொடுத்தால் மட்டுமே எதிர் பார்த்த தீர்ப்பைப் பெற முடியும்.

நாடும்... நாடு போகிற போக்கும்....

நாட்டில் பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு ஆண்டும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாதுகாக்க வேண்டிய பிரதிநிதிகளே பெண்களை சூறையாடி வருவது நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 17 வயதுப் பெண்ணின் கற்பை அரசியல்வாதியே சூறையாடி இருக்கும் சம்பவமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தக் காயங்கள் ஆறுவதற்கு முன்பே சூரத்தில் 9 வயது சிறுமி உடலில் 89 காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இந்தக் கொலைகளைப் பார்க்கும்போது, அனைவரும் சிறுமிகள்தான். ஆபாசம் வெளிப்படாத பிஞ்சுக் குழந்தைகள். சிறுமிகளிடமும் காமுகத்தைப் பார்க்கும் காட்டுமிராண்டிகள் இருக்கும் உலகில் பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 7 வயது தொடங்கி 77 வயது வரையிலான பெண்கள் வன்கொடுமைக்குள்ளாகின்றனர் என்கிறது ஐ.நா. புள்ளிவிபரம். இது அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.

ஒரு பக்கம் சிறுமிகள், இன்னொரு பக்கம் பதின் வயதினர் உள்ளிட்ட எல்லா வயதுப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்குட்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இன்னொரு புறம் அருப்புக்கோட்டை நிகழ்வைப் போல பெண்களை  விற்பனைப் பொருளாக மாற்ற முயலும் சமபவங்களும் நடைபெறுகிறது.

இத்தகைய  குற்றங்களுக்கு தனிமனித ஒழுக்கமின்மையும், குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளும், தண்டனைகளுக்கு நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதமும் முக்கிய காரணங்களாகும். 

தாமதமாக கிடைக்கும் நீதியால் எந்தப் பலனும் இல்லை. உடனடி நீதியும், கடுமையான தண்டனையும் தான் இதுபோன்ற குற்றங்களை குறைக்க முடியும். 

தனிமனித ஒழுக்கம்....

தனிமனிதன் அவன் தனித்து இருக்கும் போது அவனை கெடுக்கும்  ஸ்மார்ட் போன்கள் மற்றும் இணையதளங்களும் பெருகிவிட்டன. ஆபாச படங்களையும், காட்சிகளையும் கண்டு ரசித்து கெட்டு விட்ட தனிமனிதன் சமூகத்தில் நல்லவனாக உலவுவான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இதனை தடுக்க இணைய தள பயன்பாட்டிற்கு கடுமையான சட்ட திட்டங்கள் இயற்றாவிட்டால் நாடு பேகும் நிலையை எண்ணிப்பார்க்க முடியாது. எனவே நாம் சட்டங்களை திருத்த  நாம்  குரல் கொடுக்க வேண்டும்.


நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம்...

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டில்   2,78, 886  பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இதில் தண்டனை பெற்றவர்கள் 30 சதவீதத்திற்கும் குறைவு 70 சதவீதம் பேர் தண்டனை பெறவில்லை என்பது தான் உண்மை. 

2007- 26.4  சதவீதம், 2008- 26.6  சதவீதம், 2009- 26.9  சதவீதம், 2010- 26.6  சதவீதம், 2011-26.4  சதவீதம், 2012- 24.2 சதவீதம்,2013- 27.1  சதவீதம், 2014- 28 சதவீதம், 2015- 29.4  சதவீதம், 2016- 25.5 சதவீதம்  வழக்குகளிலேயே தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

சட்டங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும்.... 

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்  2015 ஆண்டை விட  2016 ல் 2.9 சதவீதம்  அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ் பெரும்பாலான வழக்குகள் 'கணவன் அல்லது அவரது உறவினர்களால் கொடுமை செய்யப்படுவது ஆகும். ( 32. 6 சதவீதம்) பெண்களின் மீது தாக்குதல் நடத்தி அவளுடைய மன வலிமையை  சீர்குலைத்தல் (25.0 சதவீதமாகும்)பெண்கள் கடத்தல்  (19.0 சதவீதம் ) மற்றும் 'கற்பழிப்பு' (11.5 சதவீதம்).

பாலியல் பலாத்கார வழக்கு 2015 ஆம் ஆண்டில் 34,651 வழக்குகள், 2016 ல் 38,947 என 12.4 சதவீதம்  அதிகரித்துள்ளது.

மத்திய பிரதேசத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் அதிக அளவு பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது.  4,882 வழக்குகள் (12.5 சதவீதம் ), 4,816 (12.4சதவீதம்), மகாராஷ்டிரா 4,189 (10.7சதவீதம்) ஆகும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் தான் குறைவு. 43 லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 544 ஆக பதிவாகி உள்ளது. சென்னையில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 15 பேர் தான் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. 

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி முதலிடம் பெற்று உள்ளது. 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டெல்லியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 1 லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

மொத்தத்தில் 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி  ஒரு மணி நேரத்தில் பதிவாகும் பாலியல் வழக்குகள் 39 ஆகும்.  இது 2007 ஆம் ஆண்டு 21 ஆக இருந்தது.

ஆசிஃபாவின் குற்றவாளிகளுக்கு இ.பி.கோ வின் படி கிடைக்கும் தண்டனை என்ன?

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு. 375, 376 –ன் படி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்தாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையோ வழங்கப்படலாம்.

பாலியல் பலாத்காரத்தால் ஒரு பெண் இறந்து விட்டால், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்குஇந்திய தண்டனைச் சட்டம் 302 – ன் படி கொலைக்குற்றத்தில் ஈடுபட்டதிற்காக மரண தண்டனையோ, அல்லது ஆயுள் தண்டனையோ, அல்லது அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ வழங்கப்படலாம்.

மேலும், இந்தியத் தண்டனைச்சட்ட பிரிவு 366 -இன் படி ஒரு பெண்ணை கட்டாயத் திருமணத்திற்காகவோ, வன்புணர்ச்சிக்காகவோ கடத்திச் சென்றால் பத்தாண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

பதினெட்டு வயதுக்கு குறைந்த சிறுமியை வன்புணர்ச்சிக்காக கடத்திச் சென்றால் பத்தாண்டு வரை சிறைத் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

குற்ற சதித்திட்டம் போட்டது பிரிவு 120 பி, கடத்தப்பட்ட மற்றும் தூக்கி வரப்பட்டவர்களை மறைத்துஒளித்து வைத்தல் பிரிவு 368, ஆதாரங்களை மறையச் செய்தல் 201, சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்தல் பிரிவு 340, முதலிய இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகள் மற்றும் சிறுவர் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனை அதாவது பத்தாண்டுகள் அல்லது சிறைத்தண்டனை அல்லது மரணதண்டணை இம்மூன்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது மூன்றையுமோ வழங்க முடியும்.

( நூல்: முப்பெரும் குற்றவியல் சட்டங்கள், இந்திய தண்டனைச் சட்டம், தீங்கியல் சட்டம். )

ஆசிஃபா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிற 8 பேருக்கும் மரண தண்டனை தீர்ப்பளித்து, கூட்டு மனசாட்சி என்ற பேரில் எப்படி அப்சல் குரு, யாகூப் மேமன் போன்றோர் தூக்கில் இடப்பட்டார்களோ அதைப் போன்று இந்தக் காவிக் கயவர்களும் கூண்டோடு தூக்கில் இடப்பட வேண்டும்.

அப்போது தான் இது போன்ற வன்புணர்வில் ஈடுபடும் கயவர் கூட்டத்தின் கொட்டங்கள் இந்த தேசத்தில் இல்லாது போகும்.

அப்போதும் கூட எங்கிருந்தாவது இந்த போலி மனித ( உயிர் வதை ) உரிமை ஆணையம் எனும் பேரில் மனித உரிமை ஆர்வலர் எனும் பேரில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சொம்பு தூக்கிக் கொண்டு வர வாய்ப்பு இருக்கின்றது.

நாட்டு மக்களின் மீது ஆட்சியாளருக்கு அக்கறை இருக்க வேண்டும்...

நாளொன்றுக்கு இத்தனை கற்பழிப்பு என்று கூறிய காலம் போய் நிமிடத்திற்கு இத்தனை கற்பழிப்பு என்று புள்ளிவிவரங்கள் கூறுகிற அளவுக்கு பெண்களின் பாதுகாப்பும், நாட்டு மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கும் இந்த நேரத்தில் ஓர் நேர்மையான ஆட்சியாளன் என்பவர் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

நாட்டின் சட்ட வல்லுனர்களை அழைத்து “கற்பழிப்பு பெருக கடுமையான சட்டங்களும், தாமதமான தீர்ப்புகளும் தான் காரணம் என்று கூறப்படுகின்றது” இது குறித்து என்ன சட்ட திருத்தத்தைக் கொண்டு வருவது என்று சட்ட விவாதம் நடத்தப்பட்டு, உடனடியாக பாராளுமன்றத்தில் அதை தாக்கல் செய்து உடனடியாக அனைத்து மாநிலங்களிலும் அதை செயல்படுத்தச் சொல்லி இருக்க வேண்டும்.

இப்போதும் கூட இந்த தேசத்தின் பாழாய்ப் போன பிரதமர் உலகத்தைச் சுற்றிக் கொண்டு இருக்கின்றார்.

தான் கண்ட ஓர் கனவு நாட்டு மக்களுக்கு பெரும் ஆபத்தாய் முடிந்து விடுமோ என்று அஞ்சிய ஆட்சியாளர் ஒருவர் தம் அரசவையின் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் அழைத்து உடனடியாக விவாதித்து அதற்கான தீர்வை நோக்கி நகர்ந்ததாக அல்குர்ஆனின்...

وَقَالَ الْمَلِكُ إِنِّي أَرَى سَبْعَ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعَ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ يَاأَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي رُؤْيَايَ إِنْ كُنْتُمْ لِلرُّؤْيَا تَعْبُرُونَ (43) قَالُوا أَضْغَاثُ أَحْلَامٍ وَمَا نَحْنُ بِتَأْوِيلِ الْأَحْلَامِ بِعَالِمِينَ (44)

யூஸுஃப் அத்தியாயத்தின் 43 மற்றும் 44 –ஆம் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவான்.

எங்கிருந்தோ ( ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இருந்து ) வந்த ஓர் அரசரின் கடிதம் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட வாசக அமைப்பு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்ததை உணர்ந்த ஓர் நாட்டின் ஆட்சியாளர் தம் அரசவையின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை அழைத்து “இன்றோடு இதற்கு சரியானதொரு தீர்வை கண்டு விடவேண்டும்” என்று கூறி, அவர்களின் கருத்தைக் கேட்டறிந்து, விவாதித்து நாட்டையும், நாட்டு மக்களையும் நல்வழியின் ( ஈமானிய வாழ்வின் ) பால் அழைத்துச் சென்றதாக அல்குர்ஆனின்...

قَالَتْ يَاأَيُّهَا الْمَلَأُ إِنِّي أُلْقِيَ إِلَيَّ كِتَابٌ كَرِيمٌ (29) إِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ (30) أَلَّا تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ (31) قَالَتْ يَاأَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي أَمْرِي مَا كُنْتُ قَاطِعَةً أَمْرًا حَتَّى تَشْهَدُونِ (32)

அந்நம்ல் அத்தியாயத்தின் 29 முதல் 44 வரையிலான வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுவான்.

சுய புத்தி இல்லையென்றால் சொல்புத்தியாவது இருக்க வேண்டும் அல்லவா? சட்ட வல்லுனர்களையும், அமைச்சர்களையும், மாநில முதல்வர்களையும், கவர்னர்களையும் அழைத்துப் பேச துப்பில்லை, வக்கில்லை என்றால் நாட்டு மக்களும், சமூக ஆர்வலர்களும், சமயச் சார்பின்றி எல்லா தரப்பு மக்களும் இந்த விவகாரத்தில் உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்ற போது அதை ஏற்று பாரதப் பிரதமர் என்கிற அடிப்படையில் “மான் கீ பாத்” அலைவரிசையிலாவது அறிவித்துத் தொலைய வேண்டியது தானே?

ஆணவத்தோடும், பெருமையோடும், ஆதிக்க, இன வெறியோடும் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த ஃபிர்அவ்ன் கூட தம் அதிகாரிகளின், அமைச்சர்களின் பேச்சைக் கேட்டான் என்று வரலாறு சொல்கின்றது.

தம்முடைய ஆட்சிக்கு இஸ்ரவேலர்களில் பிறக்கும் ஓர் ஆண் வாரிசால் பங்கம் வரும் என்று ஜோஸ்யக்காரன் சொன்னான் என்பதற்காக இஸ்ரவேலர்களின் ஆண் மக்களை கொன்று குவிக்குமாறு கட்டளை பிறப்பித்தான் ஃபிர்அவ்ன்.

அவனுடைய படை வீரர்களும் கொத்து கொத்தாய் கொன்று குவித்து வந்தனர். போகிற போக்கைப் பார்த்தால் அடிமை ஊழியம் செய்ய இஸ்ரவேலர்களில் ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்று அஞ்சிய ஃபிர்அவ்னின் அமைச்சர்கள் மெதுவாக “இப்படியே போனால் நம்முடைய எல்லா வேலைகளையும் நாமே தான் செய்ய வேண்டி இருக்கும். அடிமை ஊழியம் செய்ய ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்று ஃபிர்அவ்னின் காதில் ஊதினர்.

எனவே, ஆண் மக்களை கொன்று குவிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள் அரசே! என்றும் கூறினர்.

அதன் படி ஒரு வருடம் பிறக்கும் ஆண் மக்களை கொல்லாமல் விட்டு விடுங்கள்! அடுத்த ஆண்டு பிறக்கும் எல்லா ஆண் மக்களையும் கொன்று விடுங்கள்! என்று கட்டளையிட்டான் ஃபிர்அவ்ன்.

 ( அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படி கொல்லாமல் விடப்பட்ட ஆண்டில் பிறந்தவர்கள் தான் மூஸா (அலை) அவர்கள். )

அட நாட்டு மக்களுக்கு ஏற்படும் ஆபத்தில் இருந்து காப்பற்றாவிட்டாலும் பரவாயில்லை. சராசரி அரசியல் வாதியாக கூட தன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவாவது ”கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டால்” உடனடியாக மரண தண்டனை என்று அறிவித்திருக்க வேண்டாமா?

இஸ்லாமிய நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனை வேண்டும்...

ஹிஜ்ரி 1401 –ஆம் ஆண்டு துல்கஅதா மாதம் பிறை 11 அன்று, சவூதி அரேபியாவின் மாபெரும் மார்க்கச் சட்ட வல்லுனர்களும், முதுபெரும் உலமாக்களும் சவூதி அரேபியாவின் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் என ஒரு பெரும் திரளான இஸ்லாமிய கலாச்சார பாதுகாவலர்கள் ஒன்று கூடிபாலியல் பலாத்காரத்திற்கான இஸ்லாமிய தண்டனை என்ன? அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் இது குறித்து என்ன வழிகாட்டி இருக்கின்றார்கள்? என்று ஆலோசனை நடத்தினார்கள்.

ஆலோசனையின் இறுதியாக, அல் மாயிதா அத்தியாயத்தின் 33-ஆம் வசனத்தின் படிபாலியல் பலாத்காரத்திற்கான தண்டனையாகஅதிக பட்ச தண்டணையாக மரணதண்டனை வழங்குவது என தீர்மானித்து, அதை அன்றைய தேதியிலேயே அமுல்படுத்தப்பட வேண்டும் என ஃபத்வாமார்க்கத்தீர்ப்பு வழங்கினார்கள்.

அந்த தீர்மானத்தையும், ஃபத்வாவையும் அத்துணை இஸ்லாமிய நாடுகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை சவூதி மற்றும் இதர இஸ்லாமிய நாடுகளிலும் இந்தச் சட்டம் தான் நடைமுறைபடுத்தப்படுகின்றது.

إِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا أَنْ يُقَتَّلُوا أَوْ يُصَلَّبُوا أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ مِنْ خِلَافٍ أَوْ يُنْفَوْا مِنَ الْأَرْضِ ذَلِكَ لَهُمْ خِزْيٌ فِي الدُّنْيَا وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ (33)

 எவர்கள் அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் போரிடுகின்றார்களோ, மேலும், பூமியில் குழப்பம் விளைவிக்க தீவிரமாக முயற்சி செய்கின்றார்களோ அவர்களுக்குரிய தண்டனை இது தான்:

அவர்கள் கொல்லப்பட வேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்; அல்லது மாறுகை, மாறுகால்கள் வெட்டப்பட வேண்டும்; அல்லது நாடு கடத்தப்பட வேண்டும்.

இது அவர்களுக்கு உலகில் கிடைக்கும் இழிவா (ன தண்டனையா) கும். மேலும், மறுமையில் அவர்களுக்கு இதைவிடக் கடுமையான தண்டனை இருக்கின்றது.”                                                ( அல்குர்ஆன்:5: 33 )

ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்பவன் அல்லாஹ்வுடன் போர்பிரகடனம் செய்தவனாகவும், தான் வாழும் நாட்டில் அல்லது பகுதியில் பெரும் குழப்பம் விளைய காரணமானவனாகவும் ஆகிவிடுகின்றான்.

மேலும், அல்லாஹ் இந்த வசனத்தில் கூறிடும் தண்டனையைஒரு மனிதனின் உயிர், மானம், பொருள் ஆகியவைகளில் மிகப் பெரிய சேதாரத்தை உண்டுபண்ணக்கூடியவர்களின் விஷயத்திலும் வழங்கலாம். என அந்த ஃபத்வாவில் குறிப்பிட்டுள்ளனர். ( நூல்: அல்மஜ்லதுல் புஹூஸுல் இஸ்லாமிய்யா, பாகம்:16, பக்கம்:75. )

முஸ்லிம் சமூகம் எதிர் வினையாற்றுமா?

இந்த தேசத்தில் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக எவ்வளவோ வன்முறைகள், கலவரங்கள், பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்கள், கோடிக்கணக்கான பொருட் சேதங்கள், தேச விரோதி, பயங்கரவாதி என்ற அவமான அடையாளங்கள் என்று இவ்வளவையும் சகிப்புத்தன்மையோடும், பொறுமையோடும் ஏன் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம் தெரியுமா?

எங்களை வழி நடத்துவது இஸ்லாம். அந்த இஸ்லாத்தின் மகத்தான வழிகாட்டிகளான இறைவனும், இறைத்தூதரும் எங்களுக்கு எதிர் வினையாற்றுமாறு கற்றுக் கொடுக்கவில்லை.

அப்படி அந்த வழிகாட்டிகள் கற்றுக் கொடுத்திருந்தால் நாங்கள் ஆற்றுகிற எதிர்வினைக்கு எதிராக எதிரில் நிற்பதற்கு இந்த உலகில் எவரும் இருக்க முடியாது.

எங்களை எதிர்வினையாற்ற முடியாமல் தடுக்கும் மகத்தான கட்டளைகள்…

وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ

“உங்களை நாம் நடுநிலைச் சமுதாயமாக, ஏனைய எல்லா சமய மக்களுக்கும் சான்றளிக்கும் சமுதாயமாக ஆக்கியிருக்கின்றோம்”            ( அல்குர்ஆன்: 2: 143 )

كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ

“மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவர்கள் நீங்கள்”.                                     ( அல்குர்ஆன்: 3: 110 )

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى

“இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்விற்காக வாய்மையில் நிலைத் திருப்போராயும், நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள்! எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்தும் பிறழச் செய்து விடக்கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள்! இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானதாகும்”.                                         ( அல்குர்ஆன்: 5: 8 )

ஒரு செய்தியைக் காதால் கேட்கின்ற போது கூட எப்படிக் கடந்த போக வேண்டும் என்றும், ஆராயாமல் ஒரு விஷயத்தில் நீங்கள் ஆற்றுகிற எதிர்வினை என்பது உங்களின் தலைமுறையைக் கடந்து அது எப்படியான பலமான பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற எச்சரிக்கையையும் இந்த உம்மத்திற்கு அந்த வழிகாட்டிகள் வழங்கியுள்ளனர்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ (6)

“இறைநம்பிக்கை கொண்டவர்களே! தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்தால், அதன் உண்மைநிலையை நன்கு விசாரித்து தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினர்க்கு தீங்கிழைத்து விட்டு பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது. இதை நன்றாக அறிந்து கொள்ளுங்கள்!”                              ( அல்குர்ஆன்: 49: 6 )

எனவே, முஸ்லிம் என்பதற்காக கொல்கிற, கொல்லத் துணிகிற, படுகொலை செய்கிற, வன்புணர்வு செய்கிற ஓவ்வொருவருக்கும் பாடமாக அமையும் பொருட்டு ஆசிஃபா குற்றவாளிகளுக்கு தண்டனையை நீதிமன்றம், வழங்க வேண்டும்.

இந்த தேசம் பெண்களுக்கும், இதர ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மை சமூக மக்களுக்கு பாதுகாப்பான வாழ்விற்கு உத்தரவாதம் வழங்கியிருக்கிற நாடு என்பதை ஆசிஃபா குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு உறுதி செய்ய வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக குற்றங்கள் குறைந்த, குற்றவாளிகள் இல்லாத தேசமாக உலகில் அறியப்படும் அளவிற்கு இந்த தேசத்தை உயர்த்தும் முகமாக குற்றவாளிகளுக்கு வழங்கும் தண்டனை அமைந்திருக்க வேண்டும்..

விடியலை நோக்கி இந்திய தேசத்தின் மக்கள்!!!