Wednesday 27 July 2016

காஷ்மீர்: பூலோக சொர்க்கவாசிகளின் மரண ஓலம்!!!



காஷ்மீர்: பூலோக சொர்க்கவாசிகளின் மரண ஓலம்!!!

الحمد لله الذي أكمل لنا ديننا ، وأتم علينا نعمته ، ورضي لنا الإسلام دينا ، وأمرنا أن نستهديه صراطه المستقيم ، صراط الذين أنعم غير المغضوب عليهم : اليهود ، ولا الضالين : النصارى .
وأشهد أن لا إله إلا الله ، وحده لا شريك له ، وأشهد أن محمدا عبده ورسوله ، أرسله بالدين القيّم ، والملة الحنيفية وجعله على شريعة من الأمر ، أمر باتباعها ، وأمره بأن يقول : سورة يوسف الآية  قُلْ  هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي صلى الله عليه وعلى آله وسلم تسليما .
وبعد :

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய முஸ்லிம்களின் உயிர்கள் விலை பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்களை இந்து மதவெறியர்கள் கொல்ல முடியாத இடங்களில் போலீஸும், ராணுவமும் அவர்களின் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்களோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு முஸ்லிம்களின் உயிர்கள் பலி கொடுக்கப்படுகின்றது.

ஜூலை 8 ஷாஹித் புர்ஹான் முசாஃபர் வானி எனும் இளைஞர் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை தளபதியாக இருந்து வழிநடத்தியவர் என்ற குற்றச்சாட்டின் பெயரில் சுட்டுக் கொல்லப்படுகின்றார்.

இந்தப் படுகொலையைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் தான் வன்முறை வெடித்திருக்கின்றது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கற்களை வீசி போலீசாரையும், இந்திய துணை ராணுவத்தினரையும் தாக்கியுள்ளனர்.

இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட சாதாரண மக்கள் மேல் காஷ்மீர் போலீசும் இந்திய துணை இராணுவமும் கட்டவிழ்த்து விட்ட பெல்லட் கன் பயங்கரத்தால் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானவர்கள் காயம்பட்டுள்ளனர், இன்னும் சிலருக்கு கண்பார்வையும் பறிபோய் இருக்கின்றது.

2010-ம் ஆண்டில் இதே போன்றொதொரு கல்லெறி போராட்டம் நடைபெற்ற போது நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காஷ்மீரில் கொல்லப்பட்டனர். அப்போது தான் முதன் முறையாக இந்த ( பெல்லட் ரக ) ஏர்கன் சிறு குண்டு துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த துப்பாக்கியினுள் இருக்கும் கேட்ரிஜ் எனப்படும் தோட்டாப்பையில் சில நூறு குண்டுகள் இருக்கும். ஒரு முறை சுட்டால் எதிர் முனையில் ஒரே தடவையில் நூற்றுக்கணக்கான குண்டுகளை உமிழும். அந்த குண்டுகள் உடலில் எங்கு விழுகிறதோ, அந்த இடத்தை அது ரணமாக்கி விடும்.

தற்போது நடைபெற்ற குண்டு வீச்சில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 117 பேர்களில் 106 பேருக்கு அறுவைசிகிச்சை நடந்து அதில் ஐவருக்கு ஒரு கண் முற்றிலும் பறிபோயிருக்கிறது. மேலும் கண்களில் பாய்ந்திருக்கும் குண்டு துகளையும் பல நேரங்களில் எடுக்க முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து சென்ற கண் மருத்துவர்களோ இந்த துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.

சோஃபியான் மாவட்டத்தின் சீடோ கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பில் முதல் மாணவியான 14 வயது இன்ஷா மாலிக் ஸ்ரீநகர் மஹாராஜா ஹரிசிங் மருத்துவமனை ஐசியூ வில் நினைவின்றி கிடக்கிறார்.

இக்குழந்தை செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிற்குள் அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது போலீஸ் கண்மூடித்தனமாக பெல்லட் கன்னால் சுட்டு அவரது இரு கண்களையும்  துளைத்தெடுத்துவிட்டனர்.

இனி என்ன செய்தாலும் கண்பார்வையை மீட்கவே முடியாது.  அப்பெண் குழந்தையின் வலது கண் சிதைக்கப்பட்டுள்ளது; இடது கண்ணோ கிழிக்கப்பட்டுள்ளது. இனி அவள் வாழ்நாள் முழுவதும் பார்வையில்லாமல் கழிக்க வேண்டும். 

இந்த நிலையில் அங்கு பார்வையிட சென்ற உள்துறை அமைச்சர்பொதுமக்களிடம் கல்வீசி தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்றும், போலீஸ் மற்றும் இராணுவத்திடம் பெல்லட் ஷூட் நடத்த வேண்டாம் என்றும்வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏன் போராடுகின்றார்கள் கஷ்மீரிகள்...?

ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக  இருந்த பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வந்த சமயத்தில், காஷ்மீரில் பாதுகாப்புப் படைகளோடு நடந்த மோதலில்ஐந்து முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்த ஐவரும் எல்லைதாண்டி வந்த பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். இப்படுகொலையை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராடினர்.

போராட்டத்தின் விளைவாக அந்த ஐவரும் சிட்டிசிங்புரா கிராமத்தைச்   சேர்ந்த அப்பாவி முஸ்லிம்கள் என்ற உண்மை வெளியுலகுக்குத் தெரியவந்தது.

ஜம்மு-காஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு நடவடிக்கைக் குழு பணம், பதவிகளைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அப்துல் ரஹ்மான் பத்தர், ஷௌகத் கான், நஸிர் அகமது தேகா உள்ளிட்ட பல அப்பாவி முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி சுட்டுக் கொன்ற உண்மை 2007-இல் அம்பலமானது.

இப்படுகொலைகளுக்கான ஆதாரங்களை அழித்துவிட்டதாக மப்பில் திரிந்த காக்கிச்சட்டை கிரிமினல்களை காஷ்மீர் மக்களின் போராட்டம்தான் சட்டத்தின் முன் நிறுத்தியது.

இது போன்று தான் ஷாஹித் புர்ஹான் வானி விஷயத்திலும் அவருக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு உட்பட எந்த தீவிரவாத அமைப்போடும் தொடர்பு கிடையாது என தேசத்திற்கும், உலகிற்கும் உணர்த்தவே வீதியில் வந்து ஆண்களோடு, பெண்களும் குழந்தைகள் சகிதமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஷ்மீர் அவ்வளவு பயங்கரமான பகுதியா?

காஷ்மீர் ”பூலோக சொர்க்கம்” என்று வர்ணிக்கப்படும் அழகிய பனி படர்ந்த பிரதேசம் ஆகும். சுமார்  6,67,000 இராணுவ, துணை இராணுவத்தினை பாதுகாப்பிற்காக அமர்த்தி வருடத்திற்கு 6,000 கோடி ரூபாய் செலவு செய்து தான் இந்த பூலோக சொர்க்கம் காஷ்மீர் மண்ணைக் காக்க வேண்டிய அவசியம் இந்திய தேசத்திற்கு ஏற்பட்டுள்ளது. 

வாருங்கள்! கொஞ்சம் வரலாற்றின் துணை கொண்டு பூலோக சொர்க்கத்தை ஓர் பார்வை பார்த்து விட்டு வருவோம்!!

பூகோள வடிவில் கஷ்மீர்....

வடக்கில் சீனா, கிழக்கில் திபெத், தெற்கில் இந்திய ஹிமாச்சல் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள், மேற்கில் பாகிஸ்தான் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ள பிரதேசமே ஜம்மு காஷ்மீராகும்.

ஜனத்தொகை இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மக்கள் தொகை சுமார் 8 மில்லியன். பாகிஸ்தான் ஆசாத் காஷ்மீரில் சுமார் 9 மில்லியன். அகதிகளாக சுமார் 1.5 மில்லியன் காஷ்மீரிகள் வாழ்கின்றனர்.

மொத்தமாக சுமார் 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். 1,51,360 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் 63 சதவீதம் இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழுள்ளது. 37 சதவீதம் ஆசாத் காஷ்மீராக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில்  உள்ளது.

வரலாற்றின் வடிவில் கஷ்மீர்….

கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மயூர ஆட்சியின் கீழும், கி.பி.16 – 18 -ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் முகலாய ஆட்சியின் கீழும், பின்னர் 19ம், 20ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழும் காஷ்மீர் இருந்துள்ளது. 1846ல் சீக்கிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் காஷ்மீர் வந்தது.

சீக்கிய மன்னன் ரஞ்சித் சிங்கிடமிருந்து டோக்ரா (Dogra) வம்சத்தைச் சேர்ந்த குலாப்சிங், ஜம்முவை விசுவாசத்தின் பரிசாக பெற்று ஆண்டு வந்தபோது தான் ஆங்கி லேயருக்கும் சீக்கியருக்கும் போர் ஏற்பட்டது.

சீக்கிய அரசுக்கு துரோகம் செய்து குலாப் சிங் ஆங்கிலேயரை வெற்றி பெறச் செய்தான். அதற்குப் பரிசாக காஷ்மீரை 75 இலட்சம் ரூபாய்க்கு ஆங்கிலேயர் விற்று விட்டனர். அப்பொதுதான் குலாப் சிங்கிற்கும், ஆங்கிலேயருக்கும் இடையில் அமிர்தசரஸ் உடன்படிக்கை’ (1846) ஏற்பட்டது. இவ்வொப்பந்தத்தின்படி ஆங்கிலேய அரசு அதிகபட்சமாக காஷ்மீருக்குப் பாதுகாவலனாகவே இருந்தது.

குலாப் சிங் ஜம்முவின் சுதந்திர மன்னர் மஹாராஜாவாக (Princely Ruler) மாறினார். குலாப் சிங் 1857ல் இறந்தார்.

 ரம்பீர் சிங் மற்றும் பிரதாப் சிங் ஆகிய இரு மஹா ராஜாக்கள் அவரையடுத்து ஆட்சிக்கு வந்தனர். இறுதியாக வந்த ஆட்சியாளரே ஹரிசிங் (1925-1947) ஆவார். இவர்கள் அனைவரும் 80% ஆன, மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான முஸ்லிம்களை ஆட்சி செய்தனர். முஸ்லிம்களோ ஹரிசிங்கிற்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சி செய்து வந்தனர்.

இந்த தருணத்தில், பல்வேறு தேசங்களாகவும், சமஸ்தானங்களாகவும் இருந்து வந்த இந்தியா  சுதந்திரம் பெற்றது.

அப்போது, காஷ்மீரும் ஒரு தேசமாக ஒரு மன்னரின் ஆதிக்கத்திலேயே தான் இருந்தது. இந்து மன்னரான மஹாராஜா ஹரிசிங் ( தற்போது காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருக்கும் கரண் சிங்கின் தந்தையாவார் ) கஷ்மீரை அப்போது ஆட்சி செய்து வந்தார்.


முதல் கோணல்முற்றிலும் கோணல்….

1947 இல் இந்தியத் துணைக் கண்டம் சுதந்திரம் பெற்ற பின்பு இந்திய - பாகிஸ்தான் பிரிவினை கலவரம் உச்சத்தில் இருந்தது. அதன் தாக்கம் ஜம்முவிலும் எதிரொ லித்தது. முஸ்லிம்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். 5 இலட்சம் அளவிற்கு முஸ்லிம்கள் ஜம்மு விலிருந்து வெளியேறினர். இதை எதிர்க்கும் விதமாக மன்னருக்கு எதிராக முஸ்லீம்கள் ஜம்மு பகுதியில் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

இவர்களுடன் ஆப்கானிஸ் தானின் எல்லையோர பாகிஸ்தான் பகுதியில் வசிக்கும் பதான்ஆதிவாசிகளும், மன்னர் படைகளில் இருந்த முஸ்லிம்களும், அக்பர்கான் என்ற பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் தலைமையில் ஜம்முவிற்குள் நுழைந்தனர். இந்தப் பழங்குடிப் படையினர் முஸ்லீம்கள், சீக்கியர், இந்து என வித்தியாசமில்லாமல் கொள்ளைகளில் ஈடுபட்டனர்.

இந்தப் படையெடுப்பைத் தடுக்க முடியாத மன்னர் மஹாராஜா ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். காஷ்மீரின் தலையெழுத்தை மாற்றி எழுதியதும், காஷ்மீர் சிக்கலின் தொடக்கப் புள்ளியும் இதுதான் என்றால் அது மிகையல்ல.

இந்தியா - காஷ்மீர் இணைப்பு உடன்படிக்கையை நிபந்தனையாக்கி, இந்திய அரசு பழங்குடிப் படையுடன் போரிட்டது. அவர்களை விரட்டிச் சென்ற இந்திய இராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. இதை சாக்காகச் சொல்லி பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீருக்குள் நுழைந்தது.

இந்திய - பாகிஸ்தான் முதல் போர் முடிவுக்கு வந்தபோது இரண்டு இராணுவம் எவ்வளவு முன்னேறி உள்ளதோ அதை அவர்களே வைத்துக் கொள்ளலாம் என உடன்படிக்கை ஏற்பட்டது.

பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியைக் கைப்பற்றியிருந்தது. இந்த கைப்பற்றிய பகுதியின் எல்லைதான் பிறகு எல்லைக் கோடாக (LOC) நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதியை சுதந்திரக் காஷ்மீர்(Azad Kashmir) என பாகிஸ்தானும், ”பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர்(Pakistan Occupeid Kashmir-POK)  என இந்தியாவும் அழைத்துக் கொண்டனர்.

26.10.1947 அன்று காஷ்மீரைத் தற்காலிகமாக இணைப்பதற்கான இணைப்பு உடன்படிக்கை மன்னர் ஹரிசிங்கிற்கும் இந்திய அரசிற்கும் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளை இந்திய அரசாங்கம் பெற்றது.

 இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 ஆவது பிரிவின்படி சுயாட்சி உரிமைகள் கொண்ட மாநிலமாக காஷ்மீர் இருக்கும். இதையடுத்து இந்திய அரசு ஒரு வாக்குறுதி அளித்தது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய பிறகு பொதுவாக்கெடுப்பு நடத்தி இறுதி முடிவை காஷ்மீரிகளே தீர்மானிப் பார்கள் என நேரு அவர்கள் வானொலியில் (02.11.1947) தெரிவித்தார்.

நடந்ததென்ன?

இதன் பிறகு நடந்ததெல்லாம் காஷ்மீரிகளுக்கு எதிராக நடந்தது. 370 ஆவது பிரிவின்படி சுயாட்சி உரிமையை இந்திய அரசு நீர்த்துப் போகச் செய்தது. 

1951 இல் ஜம்மு - காஷ்மீருக்குத் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. ஷேக் அப்துல்லா பிரதமர் ஆனார்.

ஜனாதிபதியாக காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கின் மகன் கரண் சிங் பதவியேற்றார். ஜனாதிபதியை சட்டமன்றம்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால் நேருவின் வற்புறுத்தலினால் கரண்சிங் ஜனாதிபதியானார்.

பிரஜா பரிசத் ( ஆர்.எஸ்.எஸ். இன் ஒரு பிரிவு ) என்னும் இந்து அமைப்பு மாநில சுயாட்சியை எதிர்த்தது. காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக்க வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியது.
இதில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதனால் ஷேக் அப்துல்லா, நேருவை மதசார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றில் நம்பிக்கையற்றவர் எனப் பேசலானார். இந்தக் கருத்து வேறுபாட்டால் பேச்சு வார்த்தை நடத்தி, ‘டெல்லி ஒப்பந்தம்ஜூலை 24, 1952 இல் கையெழுத்தானது.

இதில் காஷ்மீர் சுயாட்சி பற்றி வலியுறுத்தப்பட்டது. டெல்லி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் கழித்து ஷேக் அப்துல்லாவுக்கு ரகசிய குறிப்பில் பொதுவாக்கெடுப்புக்கு சாத்திய மில்லையென 1948 இல் முடிவு செய்துள்ளதாக நேரு தெரிவித்தார்.

இந்தியாவின் தெற்காசிய பிராந்திய விரிவாக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள, இறுதியாக நேரு, காஷ்மீரின் சுயாட்சி உரிமையை இரத்து செய்தார். அத்தோடு பொது வாக்கெடுப்பு வாக்குறுதியும் காற்றில் பறக்கவிடப்பட்டது.

அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள்.....

1989 வரை ஒழுங்குபடுத்தப்பட்ட ஆயுதக்குழுக்கள் எதுவும் இந்தியாவுக்கெதிராக காஷ்மீரில் தோற்றம் பெறவில்லை.

ஆயுதப் போராட்டம் வெடித்தது முதல் இன்று வரை 93,379 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

இந்திய இராணுவப் பாதுகாப்பில் வைத்து கொல்லப்பட்டவர்கள் 6,974 பேர். அழிக்கப்பட்ட, தீ வைக்கப்பட்ட வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகளின் எண்ணிக்கை 1,05,866. விதவைகள் 22,734. அநாதையாக்கப்பட்ட சிறுவர்கள் 1,07,366 பேர். கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு, மானபங்கத்திற்கு உட்பட்ட பெண்கள் 9,946 பேர்.

                                                 ( காஷ்மீர் மீடியா சேவை வழங்கிய புள்ளி விவரங்கள் )

1990 ஜூலை 5 இல் இந்தியாவில் அமலாக்கப்பட்ட ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம் - ஜம்மு & காஷ்மீர்” { Armed Forces Special Power Act (AFSPA – JK } மற்றும் ஜம்மு - காஷ்மீர் கலகப்பகுதிச் சட்டம்ஆகிய இரு சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன.

அந்தச் சட்டத்தில்யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், ஐந்து பேர்களுக்கு மேல் கூடினால் கைது செய்யலாம், பொது ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்கும் நபர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தலாம், இரண்டு ஆண்டுகள் பிணையின்றி சிறையில் அடைக்கலாம்என்று கூறுகின்றன.

காவல்துறையும் இராணுவமும் சேர்ந்து பொதுமக்களையும் போராட்டக் காரர்களையும் நிரந்தரமாக முடமாக்குவது, சித்திரவதை செய்தல், சிறைக் காவலில் கொல்வது, போலி மோதல்களில் கொல்வது, ஆட்களைக் காணாமலாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக உண்மையறியும் குழு அறிக்கை’* தெரிவிக்கிறது.

மேலும் சராசரியாக ஒரு நாளைக்கு 10க்கும் மேற்பட்ட கொலைகள் நடக்கின்றன. ஐந்தாண்டுகளில் 20,000 பேர் இறந்துள்ளனர். இது குறைந்தபட்ச அளவு. உண்மையில் 40,000 பேர் வரை இறந்திருக்கக் கூடும் என ஆய்வறிக்கை கூறுகிறது.

( *இந்தியாவின் 8 மாநிலங்களைச் சேர்ந்த 13 குடியுரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு வெளியிட்ட காஷ்மீரின் மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆய்வறிக்கை )

மற்றொரு ஆய்வறிக்கையான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின்” ** அறிக்கை 1999 - 2009 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் படுகொலை செய்யப்பட்டு பல்வேறு புதைகுழிகளில் புதைக்கப்பட்ட சடலங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

 2,373 புதைகுழிகளில் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தன. அதில் 87.9 விழுக்காடு இறந்தவர்களின் பெயர் ஏதும் குறிப்பிடவில்லை. 154 புதைகுழிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கபட்டிருந்தன. 23 புதைகுழிகளில் 3 இலிருந்து 17 சடலங்கள் வரை புதைக்கப்பட்டிருந்தன என இவ்வறிக்கை தெரிவிக்கிறது.

காஷ்மீரில் நடந்தமோதல் கொலைகள்யாவும் போலி மோதல் கொலைகளே எனக் கூறுகிறது. மேலும் அங்கு நடந்த 50 மோதல் படுகொலைகளில் பலியானவர்கள் 39 பேர் முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர்கள், 4 பேர் இந்து மதத்தைச் சேர்ந்தவரும், 7 பேர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்படவில்லை. இவர்களில் 49 பேரை வெளிநாட்டுத் தீவிரவாதிஎன்றும், ஒருவரை உள்ளூர் தீவிரவாதிஎன்றும் முத்திரை குத்திக் கொன்றதாக அறிக்கை தெரிவிக்கிறது.

1989 - 2009 இடைப்பட்ட காலங்களில் 70,000 சாவுகள் நடந்துள்ளன. இக்கொலைகள்  அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானவை எனவும் அறிக்கை கூறுகிறது.

 ( ** முனைவர் அங்கனா சட்டர்ஜி, பர்வேஸ் இம்ரோஸ், கௌதம் நவ்லாக்கா, ஜாஹிர் உத்தீன், மிஹிர் தேசாய், குர்ரம் பர்வேஸ் ஆகியோர் அடங்கிய குழு )


.நா வும்…. காஷ்மீர் விவகாரமும்...

காஷ்மீர் மீதான உரிமைக்கு இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் வரிந்து கட்டிக்கொண்டு போட்டியிட்டன.

1948 ஜனவரி 1ஆம் தேதி அன்றைய இந்தியப் பிரதமரான ஜவஹர்லால் நேரு காஷ்மீர் விவகாரத்தை .நா. சபைக்கு எடுத்துச்சென்றார்.

.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 21-4-1948 அன்று தீர்மானம் (எண் 47) நிறைவேறியது. அதன் படி, இரு நாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அவரவர் ஊடுருவிய பகுதியிலிருந்து இரு நாட்டு இராணுவமும் வெளியேற வேண்டுமென அத்தீர்மானம் அமைந்திருந்தது. ஆனால், இது நிறைவேறவில்லை.

இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது ஆக்கிரமிப்பை சட்ட பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால், காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அவர்களின் கருத்தை அறிந்து அதன் பின்னர் முடிவெடுப்பது என்று ஐநா சபையில் ஒப்பந்தமானது.

1.காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா? 2. பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது 3. தனி நாடாகவே இருக்க வேண்டுமென விரும்புகிறார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும், வாக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மஹாராஜா ஹரிசிங் மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் .நா. சபையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்.

பாகிஸ்தான் தன்னுடைய இராணுவத்தை விலக்கிக் கொண்டால் தான் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமென இந்தியா கூறியது. நேருவுடன் ஷேக் அப்துல்லாஹ் நட்பு பாராட்டியதாலும், இந்திய இராணுவம் கஷ்மீரில் நிலை கொண்டிருப்பதால் கஷ்மீர் மக்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாதென பாகிஸ்தான் கூறியது.

உலக நாடுகளின் தலையீட்டில் இரு தரப்பு இராணுவத்தையும் வெளியேற்றலாம் என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால், கஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை விரும்பவில்லையெனக்கூறி, பாகிஸ்தானின் யோசனையை நிராகரித்த இந்தியா, பொது வாக்கெடுப்பு என்கிற ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாமல் கை கழுவியது. அதே நேரத்தில், காஷ்மீரைத் தன் பக்கம் தக்க வைத்துக் கொள்வதில் இந்தியா முழுமையாகக் கவனம் செலுத்தியது. இன்று வரை கவனஞ்செலுத்தியும் வருகிறது.

மரண ஓலத்தின் துவக்கம்....

அதன் பின்னர் 1990 வரை அவ்வப்போது மக்கள் வீதிகளில் நின்று போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று போராடிக்கொண்டிருந்தனர்.

1989 வரை ஒழுங்குபடுத்தப்பட்ட ஆயுதக்குழுக்கள் எதுவும் இந்தியாவுக்கெதிராக காஷ்மீரில் தோற்றம் பெறவில்லை.

1990 –இல் ஆயுதப் போராட்டம் வெடித்தது முதல் இன்று வரை 93,379 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

இந்திய இராணுவப் பாதுகாப்பில் வைத்து கொல்லப்பட்டவர்கள் 6,974 பேர். அழிக்கப்பட்ட, தீ வைக்கப்பட்ட வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகளின் எண்ணிக்கை 1,05,866. விதவைகள் 22,734. அநாதையாக்கப்பட்ட சிறுவர்கள் 1,07,366 பேர். கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு, மானபங்கத்திற்கு உட்பட்ட பெண்கள் 9,946 பேர்.

                                                 ( காஷ்மீர் மீடியா சேவை வழங்கிய புள்ளி விவரங்கள் )

சிற்றரசர்கள் (Princely States) எடுக்கும் தீர்மானமானது, நடைமுறையில் பெரும்பான்மை மக்களை வைத்தே மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கஷ்மீர் விவகாரத்தில் மன்னரின் முடிவே மேற்கொள்ளப்பட்டது.

ஹைதராபாத் டெக்கான் மக்களுள் பெரும்பான்மையினர் இந்துக்கள். ஆட்சியாளர்கள் முஸ்லிம் நவாப்கள். பெரும்பான்மை மக்களான இந்துக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தினர். ஆகவே, அவர்கள்.  இந்தியாவுடன் சேர்ந்து கொண்டனர்.

இதே நடைமுறை கஷ்மீரிலும் அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். 80% பெரும்பான்மை முஸ்லிம்களின் விருப்பை சிறுபான்மை ஆட்சியாளரான ஒருவர் மட்டுமே எப்படி தீர்மானிக்க இயலும்?


( துணை நின்றவை அப்துல் மலிக் . அவர்கள் எழுதிய “கஷ்மீர் வரலாறும் எதிர்காலமும்” (இணைய கட்டுரை) மார்க்ஸ் பேரா. அவர்கள் எழுதிய கஷ்மீர்... என்ன நடக்கிறது அங்கே? இந்திய வெளியீடு.   ஆலிப் எஸ்.எம் அவர்கள் எழுதிய கஷ்மீர் முடிவற்ற முரண்பாடு வெளியீடு: அரசியல் விஞ்ஞான சங்கம் )

சுமார் எழுபது ஆண்டுகளாக பலியாகிக் கொண்டிருக்கும் நம் சகோதர முஸ்லிம்களுக்காக, அநாதைகளாக்கப்படும் குழந்தைகளுக்காக, விதவைகளாக்கப் படும் நம் சகோதரிகளுக்காக நாம் செய்யவேண்டியது என்ன?

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு எவ்வகையில் எல்லாம் கடமைப் பட்டிருக்கின்றான் என்பதை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வார்த்தையும் வாழ்க்கையும் நமக்கு மிகப் பெரும் முன்மாதிரியான வழிகாட்டியைத் தந்திருக்கின்றது.

அந்த வழியில் நின்று அவர்களுக்கு ஆறுதல் தருவோம்! அமைதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ வழிவகுப்போம்!


قول رسول الله - صلى الله عليه وسلم -: ((المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا))

ஒரு இறைநம்பிக்கையாளர், மற்றொரு இறைநம்பிக்கையாளருக்குக் கட்டிடத்தைப் போன்றவராவார். எப்படி ஒரு கட்டிடம் நிலைத்திருப்பதற்கு ஒரு செங்கல் இன்னொரு செங்கலின் துணை கொண்டு உறுதிப்படுத்துகின்றதோ அதைப் போன்றுஎன நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

وقوله - عليه السلام -: ((مثل المؤمنين في توادهم وتراحمهم؛ كمثل الجسد، إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى)).

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் அன்போடும், கருணையோடும் இருப்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் உடலை உதராணமாகச் சொல்லலாம். காய்ச்சலின் போதோ, அல்லது ஏதாவது நோவினையின் போதோ உடலின் ஏதாவது ஒரு உறுப்புக்கு பாதிப்பு என்றால் ஒட்டு மொத்த உடலும் அதில் பங்கெடுத்துக் கொள்கின்றதே அதைப் போன்றுஎன நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

ஒரு முஸ்லிம் உலகின் எந்த ஒரு மூலையில் எந்த ஒரு பாதிப்புக்கு உள்ளானாலும் அந்த பாதிப்பு நமக்கு ஏற்பட்ட ஓர் பாதிப்பாக நாம் உணர வேண்டும்.

நாம் வாழ்கிற இந்த ஜனநாயக இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான வழிகளைக் கையாண்டு அவர்களின் பாதிப்பில் இருந்து அவர்களை விடுவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஒரு முஸ்லிம் வறுமையில் வாடும் போது

عن جرير بن عبد الله البجلي قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَدْرِ النَّهَارِ، فَجَاءَهُ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ مُجْتَابِي النِّمَارِ أَوِ الْعَبَاءِ، مُتَقَلِّدِي السُّيُوفِ، عَامَّتُهُمْ مِنْ مُضَرَ، بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا رَأَى بِهِمْ مِنَ الْفَاقَةِ، فَدَخَلَ ثُمَّ خَرَجَ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ، فَصَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ: {يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ} النساء: 1 إِلَى آخِرِ الْآيَةِ،
{إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} النساء: 1 وَالْآيَةَ الَّتِي فِي الْحَشْرِ: {اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللهَ} الحشر: 18 «تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ، مِنْ دِرْهَمِهِ، مِنْ ثَوْبِهِ، مِنْ صَاعِ بُرِّهِ، مِنْ صَاعِ تَمْرِهِ - حَتَّى قَالَ - وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ» قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ كَفُّهُ تَعْجِزُ عَنْهَا، بَلْ قَدْ عَجَزَتْ، قَالَ: ثُمَّ تَتَابَعَ النَّاسُ، حَتَّى رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ، حَتَّى رَأَيْتُ وَجْهَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَهَلَّلُ، كَأَنَّهُ مُذْهَبَةٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “”(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு சபையில் அமர்ந்திருந்தோம்.

அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் ( கழுத்துகளில் ) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அல்லது, அவர்களில் அனைவருமே முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம்.

அவர்களது வறிய நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறம் மாறிவிட்டது.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ( ஒருவித பதட்டத்தோடு ) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களிடம் பாங்கு சொல்லுமாறு உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரையொன்றை நிகழ்த்தினார்கள்.

அப்போது,  “மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்.

 பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப் படுத்தி உலகில்) பரவச் செய்தான், ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்” என்கிற  (4 –ஆம் அத்தியாயத்தின் 1 –ஆவது ) இறைவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்.

பின்னர், ‘அல் ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள ”இறைநம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக் கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’ எனும் ( 59 –ஆம் அத்தியாயத்தின் 18 –ஆவது ) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.

அப்போது ( உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு ‘ஸாஉ’ கோதுமை, ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்” என்றும் ”பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்” என்றும் வலியுறுத்திக் கூறினார்கள்.

உடனே ( நபித்தோழர்கள் ) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ கோதுமையிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை ( நிறைய பொருட்களைக் ) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது, பின்னர் தொடர்ந்து மக்கள் ( தங்களின் தர்மப் பொருட்களுடன் ) வந்துகொண்டிருந்தனர்.

இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று இலங்கிக் கொண்டிருப்பதை நான் கண்டேன்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு, அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்து விடாது.

அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல் படுபவர்களின் பாவமும் அ(தன்படி செயல்பட்ட) வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு” என்று கூறினார்கள்.                                    ( நூல்: முஸ்லிம் )

அல் கஹ்ஃப் அத்தியாயத்தில் மூஸா {அலை} மற்றும் கிள்ர் {அலை} ஆகியோரின் உரையாடல் மற்றும் பயணத்தின் ஊடாக பல்வேறு படிப்பினைகளையும் பாடங்களையும் சுட்டிக்காட்டுகிற அல்லாஹ் ஒரு இறைநம்பிக்கையாளன் பாதிக்கப் படுவான், அநீதிக்கு உள்ளாவான் என தெரிந்தால் ஓடோடிச் சென்று அவனை அநீதியிலிருந்து காப்பது அவசியம் என்பதை உணர்த்துவதைக் காணலாம்.

فَانْطَلَقَا حَتَّى إِذَا رَكِبَا فِي السَّفِينَةِ خَرَقَهَا قَالَ أَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا لَقَدْ جِئْتَ شَيْئًا إِمْرًا

மூஸா {அலை} அவர்களும், கிள்ர் {அலை} அவர்களும் ஒரு கப்பலில் பயணம் செய்வார்கள். அப்போது, கிள்ர் {அலை} அவர்கள் கப்பலில் ஓட்டை ஒன்றை ஏற்ப்படுத்துவார்கள். “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா இதனை ஓட்டையாக்கினீர்? திண்ணமாக, உள்ளம் பதை பதைத்துப் போகும் ஓர் காரியத்தை நீர் செய்து விட்டீர்என்று கோபத்தோடு கூறுவார்கள்.                           ( அல்குர்ஆன்: 18: 71 )

பயணத்தில் நடைபெற்ற அனைத்து விஷயங்களுக்கும் விளக்கமளிக்கும் கிள்ர் {அலை} அவர்கள் இதற்கும் விடையளிப்பார்கள்.

أَمَّا السَّفِينَةُ فَكَانَتْ لِمَسَاكِينَ يَعْمَلُونَ فِي الْبَحْرِ فَأَرَدْتُ أَنْ أَعِيبَهَا وَكَانَ وَرَاءَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ غَصْبًا

அக்கப்பல் கடலில் கூலி வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குரியது. அதனை நான் பழுதாக்க நாடியே அவ்வாறு செய்தேன். ஏனெனில், இங்குள்ள அரசன் அநியாயமான முறையில் பழுதில்லா எல்லாக் கப்பல்களையும் பலவந்தமாக அபகரித்துக் கொள்கிறான் என்பதற்காக”. என்று பதிலளிப்பார்கள். (அல்குர்ஆன்: 18: 79)

குரலாவது கொடுக்க வேண்டும்…..

ஃபிர்அவ்ன் இடத்தில் மூஸா {அலை} அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வைத்த போது

ஆரம்பத்தில் நீர் என்னிடத்தில் தானே வளர்ந்தீர்! நீர் வளர்பருவத்தில் இருக்கும் போது இன்னின்னவாரெல்லாம் நடந்து கொண்டீரேஎன்றெல்லாம் குதர்க்கம் பேசினான்.

அடுத்து, ஏக இறைவனைக் குறித்து ஏகடியம் பேசினான். தன் அமைச்சர் ஹாமானை அழைத்துஎங்கே வானத்தின் பால் செல்கிற வசதியை ஏற்படுத்திக் கொடு, அங்கு சென்று மூஸாவின் இறைவன் எங்கு இருக்கின்றான் என பார்த்து வருகின்றேன்என்றான்.

அடுத்து, சூனியக்காரர்களை அழைத்து, மண்ணைக் கவ்வி மாபெரும் தோல்வியைச் சந்தித்தான்.

அவன் மூஸா {அலை} அவர்களால் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருந்த தருணமும், ஃபிர்அவ்ன் இடத்தில் மூஸா {அலை} அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருந்த தருணம் அது.

وَقَالَ فِرْعَوْنُ ذَرُونِي أَقْتُلْ مُوسَى وَلْيَدْعُ رَبَّهُ إِنِّي أَخَافُ أَنْ يُبَدِّلَ دِينَكُمْ أَوْ أَنْ يُظْهِرَ فِي الْأَرْضِ الْفَسَادَ

என்னை விடுங்கள்! நான் மூஸாவைக் கொலை செய்து விடுகின்றேன்; இன்னும் அவர் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள அவருடைய இறைவனை அழைக்கட்டும்; உங்களுடைய மார்க்கத்தை அவர் மாற்றிவிடுவார், அல்லது பூமியில் குழப்பத்தை உண்டாக்கி விடுவார் என்று நான் பயப்படுகின்றேன்என்று ஃபிர்அவ்ன் கூறினான்.                                                  ( அல்குர்ஆன்: 40: 26 )

وَقَالَ رَجُلٌ مُؤْمِنٌ مِنْ آلِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَانَهُ أَتَقْتُلُونَ رَجُلًا أَنْ يَقُولَ رَبِّيَ اللَّهُ
அப்போது, ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரிலிருந்து தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஓரிறை நம்பிக்கை கொண்ட ஒருவர் எழுந்துஎன்னுடைய இறைவன் அல்லாஹ் என்று கூறுகின்ற ஒரு மனிதரையா நீர் கொலை செய்யப் போகின்றீர்?” என்று கேட்டார்.                                             ( அல்குர்ஆன்: 40: 28 )

அல்லாஹ் பொங்கி எழுந்த அத்தகைய இறைநம்பிக்கையாளரை நினைவு படுத்தும் பொருட்டே அந்த அத்தியாயத்திற்கு முஃமின் என பெயர் வைத்தான்.

உண்மையில், ஈமான் இருக்கும் உள்ளத்தில் நிச்சயம் சக ஈமான் தாரிக்கு ஏற்படுகிற எந்த ஒரு அநீதியையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க விடாது.

அந்த வகையில், நாம் இந்திய அரசைக் கேட்டுக் கொள்வது என்னவெனில்…

1. கருப்புச் சட்டங்களான ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம் - ஜம்மு & காஷ்மீர்” { Armed Forces Special Power Act (AFSPA – JK } மற்றும் ஜம்மு - காஷ்மீர் கலகப்பகுதிச் சட்டம்ஆகிய இரு சட்டங்களையும் கஷ்மீரிலிருந்து ரத்து செய்ய வேண்டும்.

2. பாகிஸ்தானின் தீவிரவாத ஊடுருவல் மற்றும் தீவிரவாத தாக்குதலை முறியடிக்கும் அதே வேளையில் நரக வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கும் பூகோள சொர்க்க பூமியின் வாரிசுகளான கஷ்மீரிகளை நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.

3. அரசியல் ரீதியான மாற்றத்தை அரசியல் சாசன பிரிவு 370 –ஐ பயன் படுத்தி அம்மக்களுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவைகள் எல்லாம் சாத்தியம் இல்லை என இந்திய தேசத்தின் ஆட்சியாளர்கள் கூறுவீர்கள் எனில், கஷ்மீர் மக்களின் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாக இடம் பெரும் விதமாக உங்களின் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டு, கஷ்மீர் மக்களின் மனங்களை வென்றெடுங்கள்.

ஒரு வேளை நீங்கள் அவ்வாறு நடந்து, அவர்களின் இதய சிம்மாசனங்களில் இடம் பெற்று விட்டீர்கள் என்றால் கஷ்மீரின் ஒட்டு மொத்த குரலாக “அரசியல் சாசனப் பிரிவு எண் 370 –ஐ ரத்து செய்து விடுங்கள்! ஒன்றிணைந்த இந்தியர்களாக நாங்கள் இருந்து விடுகின்றோம்!” என்ற முழக்கத்தை உலக அரங்கிற்குள் ஒலிக்கச் செய்வார்கள்.

இல்லையெனில், நாதியற்றவர்களாய், அடையாளத்தை தொலைத்தவர்களாய், நிராயுதபாணிகளாய், நிற்கதியற்றவர்களாய், அநாதைகளாய், அபலைகளாய், பூலோக சுவர்க்கத்தில் அவர்கள் இடும் மரண ஓலம் ஒரு நாளும் உங்களை நிம்மதியாக உறங்க விடாது! வரலாறும் உங்களை மன்னிக்காது! பேரரசனான அல்லாஹ்வின் சந்நிதானத்தில் நீங்கள் இவைகளுக்கெல்லாம் பதில் சொல்லாமல் ஒரு அடி கூட நகர முடியாது!

அநீதி இழைக்கப்பட்டவர்களின் சார்பாக நின்று நம்மால் போராட முடியா விட்டாலும் அவர்களுக்காக இன்று நாம் கொடுக்கும் இந்த ஒரு குரல் அவர்களின் அடுத்த சந்ததியினருக்காவது ஆறுதலைப் பெற்றுத் தரும் என்று ஆதரவு வைப்போம்!

அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுத்து அவர்களுக்கு ஆறுதல் தருவோம்! அமைதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ வழிவகுப்போம்!

யாஅல்லாஹ்! அவர்கள் விரும்பும் வாழ்க்கையை அவர்களுக்கு வழங்கி, அவர்களின் நடவடிக்கையில் பிழைகள் இருந்தால் பொறுத்தருள்வாயாக!

அம்மக்களின் அனைத்து விதமான தேவைகளையும் நீயே அறிந்தவனாக இருக்கின்றாய்! அவர்களின் அனைத்து விதமான தேவைகளையும் நீயே முன்னின்று நிறைவேற்றிக் கொடுத்து விடு ரஹ்மானே!!!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!