Thursday 28 November 2013

குறை காணும் குணத்தை விட்டொழிப்போம்!


     
     குறை காணும் குணத்தை விட்டொழிப்போம்!

நிறைவானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!

ஒரு சிலர் எப்போதும் பிறரைப் பற்றிக் குறை கூறிக் கொண்டேஇருப்பார்கள்.                                             நிறைவான எந்த விஷயங்களைக் கண்டாலும் அவர்களின் கண்களுக்கு அது மிகச் சாதாரணமாகவே தோன்றும்.
எல்லோரும் குறை உள்ளவர்கள் தான். குற்றம் செய்யாத மனிதர்கள் என்று யாரும் இவ்வுலகத்தில் கிடையாது.
பிறகெப்படி நாம் ஒருவரை யொருவர் குறை பேசுகிறோம்? இதற்கான விடையை ஓர் அறிஞன் இப்படிச் சொல்வான்.  1.தன்னை விட ஒரு காரியத்தை வேறு ஒருவர் திறம் பட செய்து முடிக்கிற போதும்,                              2.ஒரு மனிதரிடம் பொறாமைக் குணம் அதிகரிக்கிற போதும், 3.பிற மனிதன் தன் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுகிற போதும்,
4.தன்னை ஒருவர் மிக உயர்வாக கருதுகிற போதும்,
அங்கே பிறரை குறை காணும் குணம் குடி கொண்டு விடுகிறது.
பிறகு அதைத் தூக்கிக் கொண்டு தினசரி பத்திரிக்கையைப் போன்று அலையோ அலையென்று அலைந்து திரிகின்றோம்.
திருப்தி படுத்த முடியாது
லுக்மான் {அலை} அவர்கள் ஒரு நாள் தன் மகனுடன் ஓரிடத்திற்கு பயணம் மேற்கொண்டார்கள்.         தன்னோடு பலகீனமான ஒரு கோவேறுக் கழுதையையும் அழைத்துச் சென்றார்கள். வழியில் சில மக்கள்  பேசிக் கொண்டனர். “கழுதையிருக்க ஏன் இருவரும் நடந்து செல்கின்றனர்?” என்று.
மகன் தந்தை லுக்மான் {அலை} அவர்களிடம் நாம் இருவரும் முறை வைத்து பயணம் செய்வோம் என்றார். முதலில் லுக்மான் {அலை} அவர்கள் பயணமானார்கள். சிறிது தூரம் சென்ற பின் வழியில் சில மக்கள் பேசிக்கொண்டனர். “சின்னப் பையனை நடக்க விட்டு இரக்கம் இன்றி வாகனத்தின் மீது பயணம் செய்கின்றாரே? இவரெல்லாம் ஒரு பெரிய மனிதரா?” என்று.
வாகனத்திலிருந்து கீழிறங்கி தன் மகனை அமர வைத்து லுக்மான் {அலை} அவர்கள் நடந்து சென்றார்கள். சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள்.மீண்டும் வழியில் சில பேர்,”தந்தைக்கு மரியாதை செய்யாத இந்த சிறுவனை என்ன வென்று சொல்வது?” என்று பேசிக் கொண்டனர்.
வேறு வழியின்றி இருவரும் கழுதை மீதேறி அமர்ந்து பயணம் மேற்கொண்டனர்.  சிறிது தூரம் தான் சென்றிருப் பார்கள். மீண்டும் வழியில் சிலர் நின்று கொண்டு “பலகீனமான இந்தக் கழுதையை தந்தையும்,மகனும் சேர்ந்து இப்படி கொடுமை செய்கிறார்களே?” என்று பேசிக்கொண்டனர்.
இப்போது லுக்மான் {அலை] அவர்களும் அவர்களது மகனும் மீண்டும் முன்பு போலவே  நடந்து சென்றனர்
இது போல எப்போதும் சிலர் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். நம்முடைய எந்த செயலாலும் இது போன்றவர்களை திருப்தி படுத்தவே முடியாது.
மிக அருகில் நரகம்
அறிஞர் ஸஅதீ என்பவரின் மகன் இரவின் கடைசி நேரத்தில் இனிய குரலில் குர்ஆன் ஓதும் பழக்கமுடையவராய் இருந்தார். அவரின் தந்தை ஸஅதீ அவரருகே அமர்ந்து ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார். ஒரு நாள் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போது “ நான் எவ்வளவு இனிமையாக குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கிறேன். நீங்களும் எவ்வளவு அருமையாக அருகே அமர்ந்து ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.                              தூங்கிக் கொண்டிருக்கும் தம் குடும்பத்தார்களை நோக்கி “பாக்கியம் கெட்டவர்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள்” என்றார். உடனே அறிஞர் ஸஅதீ  தம் மகனை நோக்கி “ குர் ஆனை மூடிவிட்டு, போய் தூங்கு. பிறரை குறை கூறுகிற நோக்கில் நீ குர்ஆனை ஓதினாய் என்றால் ஓதிய நன்மை உன்னை சுவனத்தில் சேர்க்கும்முன், நீ கண்ட குறை உன்னை அதிவேகத்தில் நரகில் தள்ளி விடும்” என்று கண்டித்தார்கள்.                                     இன்றும் நம் சமூகத்தில் நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.  பள்ளிவாசலில் தொழ நுழைந்ததிலிருந்து தொழுது விட்டு வெளியே செல்லும் வரை முஅத்தின்,இமாம் என்று ஆரம்பித்து தலைவர்,செயலாளர்,முதல்வீடு,மூன்றாம்தெரு என்று தொடர்ந்து,வெளிநாட்டில் உள்ளவன் வரை குறை பேசி திருப்தி படுபவர்கள் தான் எத்தனை பேர்?             தொழுத நன்மைகளை உடனடியாக அழித்துவிட்டு கூடுதலான பாவ அழுக்காறுகளை சுமந்து வருகின்றனர்.
கடுமையை உணர்வோம்
அன்னை ஆயிஷா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:  ”நான் நபி {ஸல்} அவர்களிடம் ஒரு முறை கூறினேன்: “ஸஃபிய்யா “இப்படி” இருக்கிறார் என்னும் குறையே அவருக்குப் போதுமானதாகும்.” {அதாவது ஸஃபிய்யா குள்ளமானவர் என்பது அவருக்கு ஒரு பெரும் குறையாகும்} அது கேட்ட நபி {ஸல்} அவர்கள் “ஆயிஷாவே! நீஎவ்வளவு மாசு படிந்த சொல்லை உன் வாயினால் வெளிப்படுத்திவிட்டாய் எனில், அதனை கடலில் கரைத்து விட்டால் அது கடல் நீர் முழுவதையும் அசுத்தப்படுத்தி இருக்கும்” என்று என்னிடம் கூறினார்கள்.                                
                               நூல்:மிஷ்காத், பக்கம்:414    
அல்லாஹ் கூறுகின்றான்:                            “இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் நீதி {நேர்மை} யான சொல்லை மொழியுங்கள்.                       அல்குர்ஆன்:33:70
எப்போதும் குறை கண்டுபிடித்துக் கொண்டிருப்பவர்களிடம் நீதி,நேர்மை என்பதை துளி அளவு கூட காணமுடியாது.
முன்மாதிரியின் முன்மாதிரி
அனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கிறார்கள்:               “நான் நபி {ஸல்} அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். ஒரு நாளும் நான் செய்த ஒரு செயலை சுட்டிக்காட்டி “ஏன் இவ்வாறு செய்தாய்?” என என்னிடம் பெருமானார் {ஸல்} அவர்கள் கடிந்து கொண்டது கிடையாது. ஒரு போதும் என்னைக் குறை கூறியதும் கிடையாது.“சீ”என்று கூட சொன்னது கிடையாது.” நூல்:புகாரி.
அன்னை ஆயிஷா {ரலி} அவர்கள் அறிவிக்கிறார்கள்:         “நபி {ஸல்} அவர்கள் ஒரு நாளும் உணவை குறை கூறியது கிடையாது.பிடித்திருந்தால் உண்ணுவார்கள். இல்லையேல் உண்ணாமல் விட்டுவிடுவார்கள்.”             நூல்: புகாரி ”நபி {ஸல்} அவர்களின் சொல்லும், செயலும் தானே நமக்கு முன் மாதிரி! நாமும் அப்படித்தானே செயல் பட வேண்டும்?.                   
சீர் குலைக்கும் ஆயுதம்
இஸ்லாத்தில் ஏகத்துவத்திற்கு அடுத்த அந்தஸ்தைப் பெறுவது சகோதரத்துவம் ஆகும்.   ஏனெனில்,      அல்லாஹ் கூறுவான்:
              (إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ (الحجرات:10
“இறை நம்பிக்கையாளர்கள், ஒருவர் மற்றவருக்குச் சகோதரர் ஆவார்கள். எனவே, உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்புகளைச் சீர்படுத்துங்கள்.           அல்குர்ஆன்:49:10
இந்த சகோதரத்துவத்தை சீர் குலைக்கும் வலிமையான ஆயுதங்கள் எவை என்பதை அடுத்தடுத்த வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்தும் போது,
1.பிறரை பரிகாசம் செய்ய வேண்டாம்.               2.பிறரை குத்திப் பேச வேண்டாம்.                    3.பிறரை பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்க வேண்டாம். 4.பிறரின் மீது தவறான எண்ணங்கள் கொள்ள வேண்டாம்.  5.பிறரின் குறைகளை துருவித்துருவி ஆராய வேண்டாம்.   6.பிறரைப் பற்றி புறம் பேச வேண்டாம்.                    7. பிறரை விட தம்மை உயர்வாகக் கருத வேண்டாம்.
பார்க்க: அல்குர்ஆன்: 49:11முதல்13வரை உள்ள வசனங்கள். அல்லாஹ் சொன்ன வலிமையான ஆயுதங்களில் பிறரின் குறைகளை ஆராய்வதும் ஒன்றாகும்.
எப்போது ஓர் மூஃமினிடத்தில் மேற்கூறிய பண்புகளில் ஏதேனுமொன்று குடி புகுந்துவிடுமோ அப்போதே சகோதரத்துவம் சீர்குலைந்து விடும்.
நபிகளாரின் கண்டிப்பு
மக்கா வெற்றியின் போது நபி {ஸல்} அவர்களின் வருகையையும்,முஸ்லிம்களின் எழுச்சியையும் கண்டு பயந்துபோய் இக்ரிமா எமனுக்குச் சென்று விட்டார். இக்ரிமா வேறு யாருமல்ல. அபூஜஹ்லின் மகன், இவரும் தந்தையைப் போலவே இஸ்லாத்திற்கெதிராக கடும் பகமை கொண்டிருந்தார்.
இவரின் மனைவி உம்மு ஹக்கீம் பின்த் ஹாரிஸ் {ரலி} அவர்கள் எமனுக்குச் சென்று அழைத்து வந்தார்கள். பின்பு மாநபியின் சபைக்கு அழைத்து வந்தார்கள். தூரத்தில் இக்ரிமா வருவதைக் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் “வெகு தூரத்திலிருந்து சிரமத்துடன் பயணித்து வரும் பயணியே, வாருங்கள்! தங்கள் வருகை நல்வரவாகட்டும்!” என்று கூறி தம் அருகே அமர வைத்தார்கள்.
இக்ரிமா கேட்டார்: இப்போது நான் என்ன சொல்ல வேண்டும்.?                                             நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ஷஹாதத் சொல்லுங்கள். உடனடியாக ஷஹாதாவை மொழிந்து இக்ரிமா முஸ்லிமானார்கள். பின்னர் நபி {ஸல்} அவர்கள் ”இக்ரிமா.. உமக்கு என்ன வேண்டும் கேளுங்கள். எது கேட்டாலும் தருகிறேன்.” என்றார்கள்.
இக்ரிமா {ரலி} அவர்கள் சொன்னார்கள்:       “அல்லாஹ்வின் தூதரே! ஆரம்பமாக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். உங்கள் மீதான பகைமையால் உங்களை நான் கடுமையாக ஏசியிருக்கிறேன். போர்களில் கலந்து கொண்டு கண்மூடித்தனமாக நான் நடந்து கொண்டிருக்கிறேன். இவை அத்தனைக்காகவும் என்னை மன்னித்து விடுங்கள்.”  அப்போது நபி {ஸல்} அவர்கள் தம் இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி “யா அல்லாஹ்! இந்த இக்ரிமா எனக்கு எதிராக நடத்திய போருக்காக, என்மேல் கொண்டிருந்த பகைமைக்காக, என்னை ஏசியதற்காக, இவை அத்தனைக்காகவும் இவரை மன்னித்துவிடு” என்று துஆ செய்தார்கள்.           இதனைக் கேட்ட இக்ரிமா {ரலி} அவர்கள்:                   “ அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த மார்க்கத்தை தடுப்பதற்காக எவ்வளவு பொருளாதாரத்தை செலவு செய்தேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக நான் செலவு செய்வேன். இந்த மார்க்கத்திற்கெதிராக எவ்வளவு போர்களில் நான் கலந்து கொண்டேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக இறைவனின் பாதையில் நான் போர் செய்வேன்.” என முக மலர்ச்சியோடு கூறினார்கள்.  
 மாநபி {ஸல்} அவர்கள், இக்ரிமா {ரலி} அவர்கள் தம்மை நோக்கி சபைக்குள் நுழைகிற போதே அவரின் நோக்கத்தை அறிந்து கொண்டு “அபூஜஹ்லின் மகன் இக்ரிமா நம்பிக்கை கொண்டவராக உங்கள் முன் வருகிறார். அவரைக் கண்டால் அவரின் தந்தையைக் குறித்து குறை கூறி விமர்சனம் செய்யாதீர்கள். இறந்து போன ஒருவரை ஏசினால் அது உயிருடன் இருப்பவருக்கு மனவேதனையையே தரும். என்றார்கள்.”   நூல்: இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:269,270,271.      மனிதர்களின் இயல்பே தங்களுக்கு பிடிக்காத ஒருவர் கண்முன்னால் சாதாரணமாக வருகிறார் என்றால் அவரை குறை கூறி இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது தான். ஆனால்,வந்திருப்பதோ அபூஜஹ்லின் மகன் சும்மா விட்டுவிடுவார்களா? நபித்தோழர்கள். ஆகவே தான் நபி{ஸல்} அவர்கள் கண்டிப்போடு அவரின் தந்தை குறித்து குறை கூறி விமர்சனம் செய்யவேண்டாம் என கூறிவிட்டார்கள்.
விளைவு அவர் தனது நெஞ்சில் உள்ள பாரத்தையெல்லாம் இறக்கிவைத்து விட்டு நபித்தோழர் எனும் மாணிக்கமாக மாறிச் சென்றார்.
வஞ்சப்புகழ்ச்சியும் குறைதான்
ஃகலீஃபா உமர் {ரலி} அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஷாம் தேசத்திலிருந்து ஒரு முஸ்லிம் உமர் {ரலி} அவர்களைக் காண வந்திருந்தார். இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த மனிதர் ”அமீருல் முஃமினீன் அவர்களே!   மாநபி {ஸல்} அவர்களுக்குப் பிறகு சிறந்த மனிதராகவும், முஃமின்களின் சிறந்த தலைவராகவும் உங்களைத் தான் நான் கருதுகிறேன். என்றார்.                          அதற்கு உமர் {ரலி} அவர்கள் அப்படியா? என்று கேட்டுவிட்டு, “நீர் எனதருமைத் தோழர் அபூபக்ர் ஸித்தீக் {ரலி] அவர்களைப் பார்த்திருக்கிறீரா? என்று கேட்டார்கள்.     அதற்கு அவர் இல்லை நான் பார்த்ததில்லை என்று பதில் கூறினார். உடனே உமர் {ரலி} அவர்கள் “நீர் மட்டும் என் தோழர் அபூபக்ர் {ரலி} அவர்களை பார்த்திருக்கிறேன் என்று கூறியிருந்தீர் என்றால் உம்மை சாட்டையால் அடித்து விரட்டி இருப்பேன். என் தோழரை குறைபடுத்தி,என்னை உயர்வாக்கி புகழ்கிறீரோ?                       எத்தனையோ நாட்கள் அபூபக்ர் {ரலி} அவர்களின் நெஞ்சில் முளைத்திருக்கும் ரோமத்தைப் போன்றாவது நான் இருந்திருக்கக் கூடாதா? என ஏங்கிய நாட்கள் உண்டு. அப்படிப்பட்ட என் தோழரை குறைத்து மதிப்பிட்டு, என்னை உயர்வாகக் கருதுகிறீரோ?” என்று கேட்டார்கள்.
                நூல்: ஃகுல்ஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:86
உம்மத்தின் நிலை
பெரும்பாலும் குறை கூறுவோர் ”தாம் மிக உயர்வாகவும், மதிப்போடும் நடத்துகிறவர்களிடம் தான் உற்று நோக்கிப் பார்த்து அதை பிறரிடம் கூறிக் கொண்டிருப்பார்கள்.” அதனால் தான் இன்று ஆலிம்கள்,சமுதாயத் தலைவர்கள் மீது வெகு விரைவாக குறை கூற முடிகிறது. ஆனால், அது இந்த உம்மத்திற்கு அழகல்ல என்று பெருமானார் {ஸல்} அவர்கள் நயம்பட உரைத்திருக்கிறார்கள்.             ஹிஜ்ரி 8 ஜமாதில் அவ்வல் மாதம் நடை பெற்ற மூத்தா யுத்தம். அந்த யுத்தத்தில் பெருமானார் {ஸல்} அவர்களால் நியமிக்கப்பட்ட மூன்று தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக வீர மரணம் அடைய, இறுதியாக இக்கட்டான நேரத்தில் காலித் இப்னு வலீத் {ரலி} அவர்கள் படைத்தளபதி பொறுப்பை ஏற்கிறார்கள். அதுவரை பெரும் நெருக்கடிக்கும், துன்பத்திற்கும் உள்ளான முஸ்லிம்களின் படை காலித் [ரலி} பொறுப் பேற்றதும் புதுத்தெம்பையும், பொலிவையும் அடைகிறது. ஆனாலும் எதிரிப்படையினர் இரண்டு லட்சம் பேர், முஸ்லிம்களின் படையின் எண்ணிக்கையோ வெறும் பத்தாயிரம் தான், காலித் {ரலி} அவர்கள் தங்களது மதியூகத்தால் பெரும் படையை பின் வாங்கி ஓட வைத்தார்கள். ஒரு கட்டத்தில் தொடர்ந்து சென்று தாக்க வேண்டாம் என தளபதி காலித் {ரலி] உத்தரவு பிறப்பிக்கிறார்கள். அன்று மாலையே படையை மதீனாவிற்கு திருப்பிடுமாறு மீண்டும் படையினருக்கு மறு உத்தரவு பிறப்பிக்கிறார்கள் தளபதி காலித் இப்னு வலீத் {ரலி} அவர்கள். வீரர்கள் மதீனா வருவதற்கு முன் இஸ்லாமியப் படை பின்வாங்கி ஓடி வருகிறது எனும் செய்தி காட்டுத் உதீப்போல மதீனமாநகரெங்கும் பரவியது. மதீனாவிற்குள் நுழைந்த படையினரை வரவேற்று வாழ்த்துச் சொல்வதற்குப் பதிலாக, மதீனாவின் எல்லையில் திரண்டிருந்த மக்களெல்லாம் ”அல்லாஹ்வின் பாதையில் மன உறுதியோடு போராடாமல் விரண்டோடி வந்தவர்களே! என்று ஒட்டுமொத்தப் படையினர் மீதும் மண் வாரி தூற்றினர். செய்தி கேள்விப்பட்டு ஓடி வந்த அண்ணலார் தளபதியிடம் யுத்த களம் குறித்து விசாரிக்கிறார்கள். தளபதி காலித் [ரலி} அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எதிரிகள் இரண்டு லட்சம் பேர்,முஸ்லிகளோ வெறும் பத்தாயிரம் பேர் தான். மேலும் சூழ்நிலைகள் சாதகமாகி,எதிரிகள் பின் வாங்கி ஓடும் போது தான் திரும்பி வந்து விடுவது சாலச் சிறந்ததாக நான் கருதி படையினரை மதீனா திரும்புமாறு நான் கட்டளையிட்டேன். என்று கூறினார்கள். திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தை நோக்கி மாநபி {ஸல்} அவர்கள் “மக்களே! இவர்கள் விரண்டோடி வந்தவர்களல்லர். எதிர்காலத்தில் அல்லாஹ் நாடினால்…உறுதியுடன் போராடுபவர்கள். என்று கூறினார்கள்.
           நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:213
 இங்கே குறை கூறுவதற்கு முன்னால் குறைகளை சுமத்து வோரின் இடத்தில் தங்களை வைத்துப் பார்க்க வேண்டும். என நபி [ஸல்} அவர்கள் தங்களின் நடவடிக்கயின் மூலம் இந்த உம்மத்திற்கு படிப்பினை தருகிறார்கள்.
மொத்தத்தில் எந்த ஒரு முஸ்லிமும் வேறெந்த ஒருமுஸ்லிமின் குறைகளையும் தேடித் திரிந்து அதைப் பரப்பிக் கொண்டு அலையக் கூடாது என இஸ்லாம் இயம்புகிறது.
அல்லாஹ் கூறுகின்றான்:                             “இறை நம்பிக்கை கொண்டவர்களே! அதிகமான எண்ணங்களில் இருந்து தவிர்ந்துவிடுங்கள். ஏனெனில், எண்ணங்களில் சிலது பாவமாக இருக்கின்றன.மேலும், பிறரின் குறைகளை துப்பறிவதில் ஈடுபடாதீர்கள்.
                                         அல்குர்ஆன்:49:12
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ ஓ நாவால் ஈமான் கொண்டு உள்ளத்தால் உறுதி கொள்ளாத கூட்டமே! முஸ்லிம்களைப் பற்றி புறம் பேசாதீர்கள்;மேலு அவர்களின் குறைகளை தேடித்திரியாதீர்கள். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை தேடித்திரிகின்றாரோ,அவரின் குறைகளை அல்லஹ்வும் தேடுவான், எவரின் குறைகளை அல்லாஹ் தேட ஆரம்பித்து விடுவானோ அவரை அல்லாஹ் கேவலப் படுத்திவிடுவான் அவர் தன் வீட்டில் வைத்து மறைவாக செய்த போதிலும் சரியே!” அறிவிப்பாளர்: அபூ பர்ஸா {ரலி}
                     நூல்: தஃப்ஸீர் குர்துபீ,பாகம்:9,பக்கம்:139
நெப்போலியன் ஹில் எனும் எழுத்தாளன் சொல்வான் “வீட்டிலும்,வீதியிலும் சுற்றித்திரியும் நாய் தான் உடலைச் சுற்றி பறக்கும் பூச்சிகளைக் கண்டு குரைத்துக் கொண்டிருக்கும். அது போலத்தான் சிலர் மற்றவர்களின்             குறையை பெரிதுபடுத்தி பேசித்திரிவார்கள். அவர்களைக் கண்டுப் பயப்படாதீர்கள். காரியம் ஒன்றையே கருத்தில் கொண்டு முன்னேறுங்கள்.
எனவே குறை  கூறும் குணத்தை விட்டொழிப்போம்!
ஈமானை மாசு படுத்தும் குணத்திலிருந்து விடுபடுவோம்!
ஈருலக நன்மைகளைப் பெறுவோம்!!!
                    வஸ்ஸலாம்!


    

Wednesday 20 November 2013

எண்ணம் போல் வாழ்வு

             எண்ணம் போல் வாழ்வு
நம் வாழ்க்கையை தீர்மானிப்பது நம் செயல்களை விட நம் எண்ணங்கள் தான்
ஓர் அறிஞன் சொன்னான்:
“எண்ணங்களைப் பற்றி கவனமாக இருங்கள்.அவைகள் வார்த்தைகளாக மாறுகின்றன.
வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.அவை தான் செயல்களாக மாறுகின்றன.
செயல்களில்கவனமாக இருங்கள்.அவை தான் பழக்கமாக மாறுகின்றன.
பழக்கங்களில்கவனமாக இருங்கள். அவை தான் ஒழுக்கமாக மாறுகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள். அவை தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்குகின்றன.”
ஆம்!ஷைத்தான் வழி தவறியதும் அவனுடைய கீழான எண்ணத்தால் தானே!
ஒருவனின் உயர்வும் தாழ்வும் அவனின் எண்ணத்தால் தான் அமைகிறது என்று இஸ்லாம் உரக்கச்சொல்கிறது
அல்லாஹ் கூறுகின்றான்:
”ஒவ்வொருவரும் தத்தமது எண்ணங்களின்{வழிமுறைப்}படி செயலாற்றுகின்றனர்.”                   {அல்குர்ஆன்:17:84}
நபி{ஸல்}அவர்கள் கூறினார்கள்:
”மறுமை நாளில் ஓர் அடியான் அல்லாஹ்வின் சமூகத்தில் கொண்டு வரப்படுவான் அவனோடு மலை போல் குவிக்கப்பட்ட அவனுடைய நற்செயல்களும் கொண்டு வரப்படும். அப்போது அங்கே ஓர் வானவர் “இவரால் பாதிப்புக்குள்ளானவர்கள் எவரும் உண்டோ? வாருங்கள் இவரின் நன்மைகளில் இருந்து அதற்கான ஈட்டை பெற்றுச் செல்லுங்கள்.என்று அறிவிப்புச் செய்வார்.அப்போது சிலமனிதர்கள் அங்கே வந்து அவரின் நன்மைகளில் இருந்து எடுத்துச் சென்றிடுவர். இறுதியில் அம்மனிதர் மட்டும் தனியே நின்று கொண்டிருப்பார்.
அப்போது அல்லாஹ் அவரை அழைத்து “ஓஅடியானே உன்னுடைய பொக்கிஷம் ஒன்று என்னிடம் உள்ளது அதை என் படைப்பினங்களில் எவரும் அறிய மாட்டார்.பரிசுத்த என்வானவர்களும் கூட அறியமாட்டார்கள்.” என்று சொல்வான்.
அப்போது அந்த அடியான் “அல்லாஹ்வே அது என்ன”? என்று கேட்பான்.  அதற்கு அல்லாஹ் ”ஓஅடியானே உன்னுடைய தூய்மையான எண்ணங்கள் தான்! நீ ஒவ்வொரு முறை எண்ணும் போதும் அதற்கு நான் எழுபதுமடங்கு நன்மைகளை எழுதினேன்.” என்பான்.
நூல்:புகாரி, 2449,6534. தன் பீஹுல் gகாஃபிலீன்,பாகம்:2,பக்கம்:377
ஆக எண்ணங்கள் தான் ஒரு மனிதனின் உலக,ஆன்மீக வாழ்வின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கின்றன.
அல்லாஹ்வைப் பற்றிய எண்ணம்
அல்லாஹ் கூறுகின்றான்:
“அல்லாஹ்வை எவ்வாறு மதிப்பிட வேண்டுமோ அவ்வாறு அவர்கள் மதிப்பிடவில்லை”.               அல்குர்ஆன்:6:91
இந்த இறைவசனத்தின் கருத்தின் அடிப்படை இன்றைய     அநேக முஸ்லிம்களோடு ஒத்துப்போவதை காணமுடிகிறது அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையில் இந்த உம்மத் எப்படி இருக்கிறது என்பதே இதற்கு போதுமானதாகும்.
அனஸ்{ரலி}அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! நான் ஒட்டகத்தைக் கட்டி வைத்துவிட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதா? அல்லது அதனை கட்டாமல் அப்படியே அவிழ்த்து விட்டுவிட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதா?”.என்று வினவினார். அதற்கு நபிகளார், “அதனை நீர் கட்டி வைத்துவிட்டு பிறகு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையும்! என்று பதில் கூறினார்கள். நூல்:திர்மிதீ பல்கு தேசத்தைச் சேர்ந்த ஷகீக்{ரஹ்} அவர்கள் ஒரு முறை இப்ராஹீம் பின் அத்ஹம்{ரஹ்} அவர்களைச் சந்தித்து தாம் வியாபார விஷயமாக பயணம் மேற்கொள்வதாக கூறிச் சென்றார்கள். ஆனால் பயணம் சென்ற சில நாட்களிலேயே ஷகீக்{ரஹ்}திரும்பிவிட்டார்கள் எனும் செய்தி கேள்வி பட்டு இப்ராஹீம் பின் அத்ஹம் {ரஹ்} அவர்கள் ஷகீக்{ரஹ்} அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள். திரும்பி வந்த காரணம் என்ன? என்று வினவியபோது, ஷகீக் {ரஹ்} கூறினார்கள்:              ”நான் நெடுந்தூரம் பயணம் செய்த களைப்பில் ஓரிடத்தில் ஓய்வு பெற ஒரு மரத்தடியில் அமர்ந்தேன். அங்கே நான் கண்ட காட்சி தான் எனக்கு அல்லாஹ்வைப் பற்றியான ஓர் உண்மையை உணர்த்தியது. அப்படியா? என்ன அந்தக் காட்சி கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன் என்றார்கள் மாமேதை இப்ராஹீம் {ரஹ்} அவர்கள்.
நான் அமர்ந்திருந்த அந்த மரத்தின் ஒரு கிளையில் ஊனமான,குருடான ஒரு பறவை அதன் கூட்டில் இருந்தது. ஆள் நடமாட்டமே இல்லாத இந்த இடத்தில் யார் வந்து உணவளிக்கப்போகிறார்கள்? என்று நினைத்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில், எங்கிருந்தோ வந்த இன்னொரு பறவை ஊனமான அந்த பறவைக்கு தன் அலகுகளால் உணவளித்தது. இதனைக் கண்ணுற்ற நான் ”ஏன் நமக்கும் அல்லாஹ் இவ்வாறு உணவளிக்க மாட்டான்? என்ற எண்ணம் தோன்றவே நான் ஊர் திரும்பிவிட்டேன்.” அதற்கு இப்ராஹீம் {ரஹ்} அவர்கள், “தோழரே! நீங்கள் எந்தப் பறவையிலிருந்து படிப்பினை பெற்றிருக்கின்றீர்கள்? தனக்காகவும் - தன் சக உயிரினத்திற்காகவும் பாடுபட்ட அந்த நல்ல பறவையிடமிருந்தல்லவா பாடம் பெற்றிருக்கவேண்டும். காலொடிந்த பறவையிடமிருந்தா வல்லோனை விளங்கிக்கொண்டீர்கள்? என்று கேட்டார்கள்.”                    
            நூல்: அல் உஸுஸில் அஃக்லாக்கியா, பக்கம்,80
நபிகளாரின் மீதான எண்ணம்
அல்லாஹ் கூறுகின்றான்:
“இறைத்தூதர் எதை உங்களுக்கு கொடுக்கிறாரோ அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களை தடுக்கிறாரோ அதனை விட்டும் விலகி இருங்கள்.”                  
                                          அல்குர்ஆன்:59:7
இன்றைய முஸ்லிம்களில் அதிகமானோர் வாழ்வின் அனைத்து துறைகளிலும் மேலோங்கிட துடிக்கின்றனர். ஆனால், அங்கே நபிகளாரின் வார்த்தைக்கோ,வாழ்க்கை வழிகாட்டலுக்கோ முக்கியம் தருவதில்லை.
நபி {ஸல்} அவர்களின் அருமைத்தோழர்களில் ஒருவர் ஜுலைபீப் {ரலி} அவர்கள். தன்னைப் பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தார்.காரணம் அவ்வளவாக அழகாக இருக்கமாட்டார்.
ஒரு முறை நபி {ஸல்} அவர்கள்,ஜுலைபீப் அவர்களை அழைத்து என்ன திருமணம் செய்து கொள்ளவில்லையா? என்று கேட்டார்கள்.அதற்கு ஜுலைபீப் அவர்கள் ”அருவருப்பான தோற்றம் கொண்ட எனக்கு இந்த மதீனாவில் யார் பெண் கொடுப்பார்? என்று விரக்தியுடன் கேட்டார்”. தோழரே! அல்லாஹ்விடத்தில் நீர் ஒன்றும் அருவெறுப்பானவர் இல்லை. ஊரின் இந்த பகுதியில் உள்ள {ஒரு இடத்தை சுட்டிக்காட்டி}இன்ன மனிதரிடம் சென்று நான் உமக்கு பெண் கேட்டதாக சொல்லுங்கள்.என்று கூறி அனுப்பி வைத்தார்கள் நபி {ஸல்} அவர்கள். அந்த வீட்டிற்குச் சென்று நபிகளார் சொன்ன அந்த விஷயத்தைக் கூறினார்கள். அந்த வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மறுக்கவும் முடியாமல், ஆமோதிக்கவும் முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தனர்.அவருக்கு பெண் தர அவர்களின் மனம் இடம் தர வில்லை.                          அப்போது உள்ளிருந்தவாரே தமது பெற்றோரின் உரையாடலையும் ஜுலைபீப் அவர்களின் உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்த சம்பந்தப்பட்ட அந்தப் பெண்மணி தமது பெற்றோரை அழைத்து, வந்திருப்பவர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே எனக்காக அனுப்பிய மணாளன், நீங்கள் எப்படி எனக்காக மாப்பிள்ளை பார்ப்பீர்களோ அதை விட பன்மடங்கு அக்கறையோடு தான் மா நபி {ஸல்} அவர்கள் எனக்கான மணாளனை தேர்ந்தெடுத்து அனுப்பியிருப்பார்கள்.என்று கூறிவிட்டு “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனுமொரு விவகாரத்தில் முடிவு செய்துவிட்டால் பிறகு அந்த விவகாரத்தில் மாற்று முடிவு எடுக்கும் அதிகாரம் இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும்,இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்தப் பெண்ணுக்கும் கிடையாது.” எனும் இறை வசனத்தை தம் பெற்றோரிடம் ஓதிக் காண்பித்துவிட்டு என் விஷயத்தில் நபிகளாரின் முடிவையே நான் திருப்தி அடைகிறேன். ஜுலைபீப் அவர்களை என் மணாளராக்க மனப்பூர்வமாக சம்மதிக்கின்றேன்.என்று கூறினார்கள்
நபி {ஸல்} அவர்களின் முன்னே அமர்ந்து அந்த வீட்டில் நடை பெற்ற அத்துனை நிகழ்வினையும் ஜுலைபீப் {ரலி} விவரித்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்மணி உதிர்த்த வார்த்தைகளை கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் “அல்லாஹூம் மஸ்புப் அலைஹல் ஃகைர ஸப்பா! வலா தஜ்அல் அய்ஷஹா கத்தா!
இறைவா! அப்பெண்மணியின் வாழ்க்கையில் அனைத்து வகையான நலவுகளையும் கொட்டுவாயாக! கேடுகளும்,சோதனைகளும் நிறைந்த வாழ்வை கொடுத்து விடாதே! என்று அகம் மகிழ துஆ செய்தார்கள். இந்த செய்தியை அறிவிக்கின்ற அபூ பர்ஸா {ரலி} அவர்கள் ”மதீனாவிலேயே,அன்ஸாரிப்பெண்களிலேயே இந்தப் பெண்மணியை விட செல்வச் சீமாட்டியை நாங்கள் கண்டதில்லை”.என்று கூறுகின்றார்கள்
பின்னர் ஜுலைபீப் {ரலி} அவர்களை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்துகொண்டிருந்தார்கள் அப் பெண்மணி.
பெருமானார் {ஸல்} அவர்களோடு ஒரு போரில் கலந்து கொள்ள ஜுலைபீப் அவர்கள் புறப்பட்டுச்சென்றார்கள். அந்தப் போரில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியை நல்கினான். இறுதியாக ஷஹீதானவர்களை கணக்கிடும் பணியில் நபிகளாரும்,தோழர்களும் ஈடுபட்டிருந்தனர். எவரையாவது விட்டு விட்டீர்களா?என நபியவர்கள் வினவ,ஆம் இன்னின்னாரை விட்டு விட்டோம். என தோழர்கள் கூறினார்கள்.மீண்டும் நபியவர்கள் வினவ, முன்பு போலவே தோழர்கள் பதில் கூறினர். மூன்றாம் முறையும் நபியவர்கள் கேட்டுவிட்டு ஜுலைபீபை காணவில்லையே? சென்று போர்க்களம் முழுவதும் நன்றாக தேடுங்கள் என்றார்கள். ஓரிடத்தில் ஜுலைபீப் ஷஹீதாக்கப்பட்டு கிடப்பதாக நபியிடத்தில் வந்து தோழர்கள் கூறினார்கள்.உடனடியாக கிளம்பி அந்த இடத்திற்கு வந்த நபி {ஸல்} அவர்கள் அங்கே ஜுலைபீபை சுற்றி ஏழு இறை மறுப்பாளர்கள் கொல்லப்பட்டுக்கிடந்ததை பார்த்தார்கள். நபி{ஸல்} அவர்கள் கூறினார்கள்:”இதோ இங்கு ஷஹீதான ஜுலைபீப் ஏழு காஃபிர்களுடன் கடுமையாக போரிட்டு பின்னர் அவர்களை கொன்றுவிட்டு பிறகு அவர் ஷஹீதாகி இருக்கிறார். “அறிந்து கொள்ளுங்கள்! ஜுலைபீப் என்னைச் சார்ந்தவர், நான் அவரைச் சார்ந்தவர்! என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர் அவரை தம் இரு கைகளாலும் வாரி அணைத்து தூக்கிச் சென்று தாமே கப்ரில் அடக்கம் செய்தார்கள் மா நபி {ஸல்} அவர்கள்.                        நூல்:இப்னு ஹிப்பான்,பாகம்:9,பக்கம்:334,இஸ்தீஆப்,பாகம்:1,பக்கம்:155,156,முஸ்னத் அஹ்மத்,பாகம்:4,பக்கம்:422.
ஒரு முஸ்லிமின் எண்ணங்களில் மிக உயர்ந்தது அவன் அல்லாஹ்வை குறித்தும்,{ஸல்}அவர்களை குறித்தும் மிகச் சரியாக விளங்கி வைத்திருப்பதாகும்.
எனவே மேற்கூறிய வரலாறுகளில் இருந்து பாடம் பெறுவோம்.
தன்னைப்பற்றிய எண்ணம்
ஒரு மனிதன் தன்னைப் பற்றி தற்பெருமை கொள்ளவும் கூடாது,அதே நேரத்தில் கீழான எண்ணமும் கொள்ளக்கூடாது. ஆனால்,இவ்வுலகில் வெற்றிக்கான வாழ்க்கையை தன்னால் வாழ இயலும் என உறுதியாக எண்ணவேண்டும்.
ஒரு முறை யமனின் நஜ்ரான் பகுதியைச் சார்ந்த சில முஸ்லிம்கள் தங்களுக்கு மார்க்கவிஷயங்களை கற்றுத் தரவும்,தங்கள் பகுதியில் அழைப்புப்பணி செய்யவும்,தங்களுக்கு இமாமத் செய்யவும் ஒருவரை தங்களோடு அனுப்பி வைக்குமாறு மாநபி {ஸல்} அவர்களிடம் வேண்டி நின்றனர்.அப்போது நபி {ஸல்} அவர்கள் ”உங்களோடு நம்பிக்கையான ஒருவரை அனுப்பி வைக்கிறேன்” என்றுகூறினார்கள். இந்த நேரத்தில் லுஹர் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. நபிகளார் கூறிய அந்த நம்பிக்கையாளராக நாமாக இருக்க மாட்டோமா? என்று ஒவ்வொரு ஸஹாபியும் ஆசைப்பட்டனர்.
இகாமத் சொல்லப்பட்டது, நபி {ஸல்} அவர்கள் தொழ வைத்தார்கள்,உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்.தொழுது முடித்ததும் நபி {ஸல்} அவர்கள் வலது புறம் பார்த்தார்கள்,பின்பு இடது புறம் பார்த்தார்கள். என் மீது நபியவர்களின் பார்வை பட வேண்டும், என்னை அழைக்க வேண்டும் என்பதற்காக குதிங்காலால் ஊனி எட்டி எட்டிப் பார்த்தேன்.இறுதியாக நபி {ஸல்} அவர்களின் பார்வை அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி} அவர்களைச் சென்றடைந்தது. பின்னர் நபி {ஸல்} அவர்கள் அபூ உபைதாவை அழைத்தார்கள், பின்னர் நஜ்ரான் முஸ்லிம்களை அழைத்து இதோ இவரை அழைத்துச் செல்லுங்கள். “ஒவ்வோர் உம்மத்திற்கும் ஓர் நம்பிக்கையாளர் உண்டு.என்னுடைய உம்மத்தின் நம்பிக்கையாளர் அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி}” என்று கூறினார்கள்.
உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:
”ஓர் உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும் அந்த நேரம் வரை நான் எந்த புகழுக்கும்,பதவிக்கும் ஆசைபட்டது கிடையாது அன்று நான் ஆசை பட்டேன் நபிகளாரின் புனித வாயால் அந்த புகழாரத்தை அடையவேண்டுமென்று ஆனால்  அபூ உபைதா அவர்கள் அதை தட்டிச் சென்று விட்டார்கள்”.           நூல்:ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:241
 ஃகைபர் கோட்டையை முற்றுகையிட்டிருந்தது மா நபி {ஸல்} அவர்களின் தலைமையிலான முஸ்லிம்களின் அணி கோட்டைக்கு உள்ளிருந்து குடைச்சல் கொடுத்தனர் அல்லாஹ்வை மறுக்கும் எதிரணியினர்.முதல் நாள் முடிவுக்கு வந்தது. அப்போது நபி {ஸல்} அவர்கள் “ நாளை நான் ””அல்லாஹ்வும்,அவன் தூதரும் நேசிக்கின்ற, அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நேசிக்கின்ற ஒருவரிடம் கொடியை கொடுப்பேன். அல்லாஹ் அவர் கரங்களின் மூலம் வெற்றியை வழங்குவான்”” என்று கூறினார்கள்.
உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:                               ஓர் உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும் அதுவரை நான் எந்த புகழுரைக்கும்,அந்தஸ்துக்கும் ஆசைப் பட்டது கிடையாது. அன்று நான் அல்லாஹ்வும்,அவன் தூதரும் நேசிக்கின்ற ஒருவனாக ஆக வேண்டும், நபிகளாரின் அமுத வாயால் சொல்லப்பட்ட சோபனத்திற்கு சொந்தக்காரனாய் ஆக வேண்டும் என ஆசைப் பட்டேன்”.ஆனால் அதை அலீ {ரலி} அவர்கள் தட்டிச் சென்று விட்டார்கள்.
.                                                               நூல்: ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:294                         இந்த இரு வேறு அறிவிப்புக்களையும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ஃகாலித் முஹம்மத் ஃகாலித் {ரஹ்} தங்களது இரு வேறு நூற்களில் பதிவு செய்திருக்கின்றார்கள்.
இங்கே உமர் {ரலி} அவர்கள் தங்களின் மீதான எண்ணத்தை எவ்வாறு அமைத்திருந்தார்கள்!.இது தான் பிற்காலத்தில் ஆட்சியாளராக பரிணமிக்கும் உயர்வைப் பெற்றுத்தந்தது.
பிறரின் மீதான எண்ணம்
அல்லாஹ் கூறுகின்றான்:
“இறை நம்பிக்கையாளர்களே! உங்களின் எண்ணங்களில் அதிகமானதை தவிர்த்துக்கொள்ளுங்கள், ஏனெனில் சில எண்ணங்கள் பாவமாக இருக்கின்றன.”
                                       அல்குர்ஆன்:49:12             இன்று ஒருவரைப் பற்றி நாம் யாரிடமாவது விசாரித்தால் அவரைப்பற்றிய தவறான நடவடிக்கைகளையே நம்மிடம் கூறப்படும். காரணம் சதா அவரைப் பற்றி வேயப்பட்டுள்ள எண்ண வலைகளே! ஆனால், அல்லாஹ் இவ்வாறான நடவடிக்கைகளை கைவிடுமாரு பணிக்கின்றான்.
அன்னை ஆயிஷா {ரலி} அவர்களைப் பற்றி நயவஞ்சகர்கள் அவதூறு பரப்பிய அந்த தருணங்களில் பெரும்பாலான முஃமின்கள் மவுனமாக இருந்தனர்.
அத்தகைய முஃமின்களை நோக்கி அல்லாஹ் பேசினான்:              “நீங்கள் இதனைக் கேள்விப்பட்டதுமே, நம்பிக்கையாளர்களான ஆண்களும்,பெண்களும் தங்களைப் பற்றி  நல்லெண்ணம் கொண்டிருக்க வேண்டாமா? இது ஓர் அப்பட்டமான அவதூறு என்று சொல்லியிருக்க வேண்டாமா?
                                          அல்குர்ஆன்:24:12
ஃபத்ஹ் மக்காவின் போது பிலால் {ரலி} அவர்களை நபி {ஸல்} அவர்கள் கஃபாவின் முகட்டின் மீதேறி பாங்கு சொல்லச் சொன்னார்கள். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த உத்தாப் இப்னு உஸைத் என்பவன் “இந்த நாளின் கொடுமையான இந்தக் காட்சியை காண்பதற்கு முன்பே என் தந்தை இறந்துவிட்டார்” என ஏளனமாகக் கூறினான். ஹாரிஸ் இப்னு ஹிஷாம் என்பவனோ “அடிமையான இந்த கருப்பு காக்கையை விட்டால் முஹம்மதுக்கு வேறு மனிதரே கிடைக்கவில்லையா? என்று கேலி பேசினான். அபூசுஃப்யான் சொன்னார் “ நான் ஒன்றும் சொல்லமாட்டேன் அப்புறம் அது குறித்து அல்லாஹ் இறை வசனத்தை இறக்கிவிடுவானோ என நான் அஞ்சுகிறேன்” என்றார். அப்போது அல்லாஹ் பின் வரும் வசனத்தை                “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம்.பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும்,கோத்திரங்களாகவும் அமைத்தோம்.”உண்மையில் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தான்.” நிச்சயமாக, அல்லாஹ் அனைத்தையும்அறிந்தவனாகவும்,தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.”                           அல்குர்ஆன்:49:13
இறக்கியருளினான்.
பிறரின் மீதான எண்ணத்தின் அளவுகோலை அல்லாஹ் இங்கே விவரித்துக் காட்டுகின்றான்.
ஆக நமது இன்றைய எண்ணமும் செயலும் தான் நாளைய நம் வாழ்க்கையை வடிவமைக்கின்றன.
    எனவே எண்ணங்களை தூய்மையாக்குவோம்!
         உயர்வான வாழ்வைப் பெறுவோம்!
                    வஸ்ஸலாம்.
 

Wednesday 13 November 2013

முழு வெற்ற கண்ட முழு மனிதர் முஹம்மது (ஸல்) அவர்கள்


முழு வெற்ற கண்ட முழு மனிதர் முஹம்மது (ஸல்) அவர்கள்

Mohammed is the most successful leader in the world - (Carl – Marks)
முஹம்மத் இஸ் மோஸ்ட் சக்ஸஸ் ஃபுல் லீடர் இன் வேர்ல்ட் (காரல் மார்க்ஸ்)

உலகத் தலைவர்களில் முழு வெற்றகண்ட முழு மனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தான்என காரல் மார்க்ஸ் எனும் அறிஞன் புகழாரம் சூட்டினான்.
THE 100 எனும் தனது நூலில் மைக்கேல் H.ஹார்ட் என்ற கிறிஸ்துவ எழுத்தாளர் உலகில் தலை சிறந்த நூறு நபர்களில் முதலாம் நபராக முஹம்மத் (ஸல்) அவர்களை தேர்வு செய்து முதல் இடம் பெறச் செய்திருக்கிறார்.
இதுபோன்று எண்ணற்ற அறிஞர்கள், ஆய்வாளர்கள், மேதைகள், அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குறித்து சிறப்பித்து புகழாரம் சூட்டியுள்ளனர்.
உலகில் வேறெந்த தலைவருக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு உண்டென்றால் அது
நபி (ஸல்) அவர்களைப் பற்றி பதிவு செய்யப்படுகிற எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அது தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதும், அதைச் சொன்னவரின் வாழ்க்கை அலசி ஆராயப்படுவதும் உலகில் வேறெந்த தலைவரின் வரலாற்றை பதிவு செய்யும் போது இவ்விதி பின்பற்றப்படுதில்லை.

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை சொன்னவர்களின் (பல்லாயிரக் கணக்கானவர்களின்) வாழ்கை்கையும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது மற்றுமோர் சிறப்பாகும்.

உதயமும், வெளிச்சமும்
கி.பி. 571-ல் பிறந்து சற்றேறக்குறைய 63 ஆண்டு காலத்தில் வெறும் 23 ஆண்டு காலம்தான் இப்புவியை புரட்டிப்போட, உலக மாந்தர்களின் அறியாமையை அகற்ற, இருளடைந்திருந்த மனித குல இதயங்களில் வெளிச்ச மேற்றிட, முஹம்மத் (ஸல்) அவர்கள் எடுத்துக்கொண்டது.
இந்த 23 ஆண்டுகளில்
தனி மனித ஒழுங்கு, பொது வாழ்க்கை, ஆன்மீகம், குடும்பவாழ்க்கை மனிதநேயம், சமய நல்லிணக்கம், அரசியல், கல்வி என அனைத்து தளங்களிலும் தங்கள் வாழும் காலத்திலேயே முழு வெற்றியை கண்டவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள்.
இன்று 140 இஸ்லாமிய நாடுகள், 160 கோடி முஸ்லிம்கள் கோடிக்கணக்காண இறையில்லங்கள், லட்சக் கணக்கான இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள். இவை அனைத்தும் அந்த 23 ஆண்டு கால முழு வெற்றிக்கான சான்றுகளாகும்.
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் இருக்கிற ரணங்கள், காயங்கள், தோல்விகள், அவமானங்கள், இழப்புகள் முஹம்மத் (ஸல்) அவர்களின் வெற்றிக்குப் பின்னாலும் உண்டு. ஆனால் வெற்றியின் மமதையில், பெருமையில், செருக்கில் ஒருபோதும் மாநபி(ஸல்) அவர்கள் நடந்து கொண்டதில்லை.
ஆகவே, உலக மனித சமூகத்தின் உயர்வுக்கும், வெற்றிக்குமு் வித்திடுகின்ற வாழ்க்கை, முன்மாதிரி முஹம்மத் (ஸல்) அவர் அல்லாஹ் கூறுகின்றான்

உங்களில் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகின்றவர்களுக்கும், அல்லாஹ்வை அதிக மாக நினைவு கூறுபவருக்கும் அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஓர் அழகிய முன்மாதிர் இருக்கின்றது
(அல்குர்-ஆன்: 33:21)
உலகத் தலைவர்களும், முஹம்மத் (ஸல்) அவர்களும்
மனித வாழ்க்கையில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் உலகையே தமது கொள்கையால் திரும்பித் பார்க்க வைத்தவர்கள் மனித வாழ்வை புரட்டிப் போட்டவர்கள் என்றெல்லாம் வரலாறு போற்றும் பலதவைர்கள்
அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்கள் கண் முன்னிலேயே அவர்களின் கொள்கைகள், கோட்பாடுகள் குழிதோண்டி புதைக்கப்படுவதை கண்டார்கள், அவர்களால் ஒன்றும் செய்திட இயலவில்லை.

அஹிம்சையை உலகில் நிலையான வெற்றியை பெற்றுத்தரும் என்று போதித்தார் காந்தியடிகள்.
சுந்திர இந்தியா அமைய அவரின் அஹிம்சையே அடித்தளம் என இன்றளவும் சொல்லப்பட்டு வருகிறது.
ஒருமுறை லூயிஸ்பெஷர் எனும் ஆங்கிலேயன் காந்தியை சந்தித்தார்.

லூயில் பெஷர்:   சுதந்திர இந்தியாவிற்காக போராடும் நீங்கள் இந்தியா சுதந்திர மடைந்தால் ஆயுதங்களை என்ன செய்வீர்கள்? எனக் கேட்டார்.
காந்தி                       கடலில் எறிந்திடுவேன், வயலிலும், தோட்டங்களிலும் வேலை செய்ய ராணுவப்படைகளை அனுப்புவேன் என்றார்.
லூயிஸ் பெஷர்   யாராவது போர் தொடுத்தால்? என்ன செய்வீர்கள்? எனக் கேட்டார்.
காந்தி                       போர் செய்ய வருபவர்களை நாங்கள் விருந்தினர்களாக அங்கீகரிப்போம், எங்களோடு வாழச் செய்வோம், உபசரிப்போம் என்றார்.
இந்தியா சுதந்திர நாடானது. நாட்டை தலைமை தாங்கி வழி நடத்துமாறு நாட்டு மக்களும், அரசியல் தலைவர்களும் அழைப்பு விடுத்தனர் காந்திக்கு,
பதவி வேண்டாம் என்றார், தட்டிக் கழித்தார்.
உலக நாடுகளின் நாளைய கேள்விக்கு பயந்து மறுத்தார்?
அவருடைய சீடர்கள் அரசாங்கத்தை அமைத்தனர், ராணுவத்தை கலைத்துவிடச் சொல்லவில்லை காந்தி.
இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியபோது வாருங்கள் விருந்தாளிகளாகநாங்கள் உபசரிக்கின்றோம் எனக்கூறவில்லை காந்தி
குண்டு நிரப்பப்பட்ட மூன்று விமானங்களை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.
எங்கே போனது அவர் முழுங்கிய அஹிம்சை முழக்கம்?

அபூ சுஃப்யான் இஸ்லாத்திற்கெதிராக ஃப்தஸ் மக்கா முன்வரை நடந்த அனைத்து யுத்த களத்தையும் தலைமையேற்று வழி நடத்திய மாபெரும் தளபதி.

முழுக்க தமது சிந்தையையெல்லாம் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் எப்படி அழிப்பது என்பது பற்றியே பயன்படுத்தியவர் குறிப்பாக உஹத்முஸ்லிம்கள் சிதறி ஓடுவதற்கும், முஸ்லிம்கள் தோற்றுப் போவதற்கும் முக்கிய காரணியாய் திகழ்ந்தவர். நல்ல மதயோகி. இஸ்லாத்திற்கெதிரான எந்த ஒரு கூட்டமும், ஆலோசனையும் இவர் இன்றி நடைபெறாது.

ஹிஜ்ரி8 ரமால் பிறை10, 10000 தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்கா நோக்கி புறப்பட்டார்கள். இரவில் மர்ருள்ளஹ்ரான் எனும் இடத்தில் கூடாரம் அமைத்து இரவு தங்கினார்கள். நெருப்பு மூட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு கட்டளையிட்டார்கள். உமர் (ரலி) தலைமையில் பாதுகாப்புபடையொன்றை நியமித்தார்கள் (ஸல்) அவர்கள்.

அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வெண்மை நிற கோவேறு கழுதையில் ஏறி அப்படியே வந்த கொண்டிருந்தார்கள்.

ஓரிடத்தில் ஸஹாபாக்களால் மூட்டப்பட்ட நெருப்பின் பிரம்மாண்ட வெளிச்சத்தைப்பற்றி இருவர் பேசிக் கொண்டிருப்பது கேட்டு அந்த இடத்தை நோக்கி சென்றார்கள் அப்பாஸ் (ரலி)

அவர்களின் குரலை வைத்து இருவரில் ஒருவர் அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப் என்றும் மற்றொருவர் புதைல் இப்னு வரகா என்றும் தெரிந்து கொண்டார்கள்.

அபூ சுஃப்யான் சொன்னார்இன்று இரவில் தெரியும் நெருப்பு போன்றும், அங்கு கூடியிருக்கும் படையைப் போன்றும் நான் வேறெங்கும் பார்த்ததில்லை.

அதற்கு புதைல் சொன்னார்: இது குஸாஆ கோத்திரத்தின் படையாகும். நம்மீது போர் தொடுக்கத்தான் இவர்கள் இவ்வாறு நெருப்பு மூட்டியிருக்கிறார்கள்

அபூ சுஃப்யான் சொன்னார்: இல்லை, அவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள். மேலும், நம்மீது போர் தொடுக்குமு் அளவு துணிவு இல்லாதவர்கள் இது அவர்களின் படையாகவோ, அவர்கள் மூட்டிய நெருப்பாகவேர இருக்க வாய்ப்பில்லை.
என்று இருவரும் உறையாடிக் கொணடிருந்ததைக் கேட்டுக்கொண்டே அபா ஹன்ளலா (இது அபூ சுஃப்யானின் புனைப்பெயர்) என்று அழைத்தார்கள். பதிலிக்கு பதிலுக்கு அபூ சுஃப்யானும் அபுல் பள்ல்? எனக் (இது அப்பாஸ் (ரலி) அவர்களின் புனைப்பெயர்) கேட்டார்.
அபூ சுஃப்யானே நீ அழிந்து போனாய்! குறைஷிகளும் அழிந்தே விட்டனர்! அவர்களும் அவர்களின் தோழர்களும் வந்து இறங்கியுள்ளனர் என்றார் அப்பாஸ் (ரலி)

நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்கள் என்றால் உன்னை கொன்றே விடுவார்கள், என்றார் அப்பாஸ் (ரலி)

தப்பிக்க என்ன வழி?

இதோ! என் கோவேறு கழுதையில் ஏறு! உன்னை நான் நபி (ஸல்) அவர்களின்முன் கொண்டு நிறுத்துகிறேன். உனக்கு நான் அவர்களிடமிருந்து அபயம் பெற்றுத் தருகிறேன்.

முஸ்லிம்களின் கூடாரத்தை நெருங்கிய ஒவ்வொருவரின் நெருப்புக்குண்டத்தை தாண்டும்போதும் யார் எனக் கேட்கப்பட்டு இவர்கள் நபிகளாரின் பெரிய தந்தை என்றும் இது நபிகளாரின் கோவேறு எழுதையென்றும் அவர்களாகவே பதில் கூறிக் கொண்டனர்.

உமர் (ரலி) அவர்களுக்கருகில் நான் கடந்து சென்ற போது
அல்லாஹ்வின் எதிரி அபூ சுஃப்யான்! எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! எவ்வித ஒப்பந்தமும், விதியும், உம்மோடு இல்லாதபோது உம்மை என்னிடம் சிக்கவைத்துவிட்டான்என்று கூறியவாறு விருவிய வாளுடன் ஓடி வந்தார்.

அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்
நிலைமையை உணர்ந்துகொண்ட நான் வேகமாக கழுதையை செலுத்தி நபி (ஸல்) அவர்களின் கூடாரத்திற்குள் அபூ சுஃப்யானோடு நுழைந்து கொண்டேன். அடுத்ததாக உமர் (ரலி) நுழைந்து

அல்லாஹ்வின் தூதரே! இதோ அல்லாஹ்வின் எதிரி அபூ சுஃப்யான் எந்த விதிமுறையும், ஒப்பந்தமும் இல்லாத நிலையில் அல்லாஹ் சிக்க வைத்துள்ளான். அனுமதி கொடுங்கள் அவர் கழுத்தை அறுத்துவிடுகிறேன்.

அப்பாஸ் (ரலி) சொன்னார்கள்
            நான் அடைக்கலம் கொடுத்துள்ளேன்.
            அல்லாஹ்வின் தூதரே!
ஆனால், உமர் (ரலி) அவர்கள் அபூ சுஃப்யானை கொன்று விட அதிக முனைப்புடன் இருந்தார்கள்.

என்னை தனிமையில் விட்டுவிடுங்கள். யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்.
என்னிடம் காலையில் அபூ சுஃப்யானை அழைத்து வாருங்கள் என்று அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மறுநாள் காலை நபி (ஸல்) அவர்களின் முன் அமர்ந்திருந்த அபூ சுஃப்யானை நோக்கி

அபூ சுஃப்யானே! உனக்கு என்ன கேடு?
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று நீ இன்னுமா தெரிந்துகொள்ளவில்லை என்று  நபி (ஸல்) அவர்கள் கேட்க,
என் தாய், தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!
எவ்வளவு பெரிய சாந்த குணம் கொண்டவர்கள் நீங்கள்!
எவ்வளவு சங்கையானவர்கள் நீங்கள்!
குடும்ப உறவுகளை எவ்வளவு பேணுகிறீர்கள் நீங்கள் எனப் பதிலளித்தார் அபூ சுஃப்யான்.

மீண்டும் நபி (ஸல்) அவர்கள்
அபூ சுஃப்யானே உனக்கு என்ன கேடு!
நான் அல்லாஹ்வின் தூதர் தான் எனறு விலங்கிக் கொள்ள இன்னுமா உனக்கு நேரம் வரவில்லை? எனக் கேட்டார்கள்.

என் மனதில் இந்த விஷயத்தில் இன்னும் சிறிதளவு சந்தேகம் இருந்து கொண்டுதானிருக்கிறது என்றார் அபூ சுஃப்யான்.

அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூ சுஃப்யானே
உன்னை கொள்வதற்குமுன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்! என்றார்கள்.
அபூ சுஃப்யான் அக்கணமே இஸ்லாத்தை ஏற்று ஏகத்துவ சாட்சியம் அளித்தார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம்

அபூ சுஃப்யான் கொளரவத்தை விரும்புபவர் அவரை ஏதாவது கொண்டு கொளரவியுங்கள், என்றார்.
ஆம் அப்பாஸே!
யார் அபூ சுஃப்யான் வீட்டுக்குள் நுழைந்து கொண்டாரோ அவர் அபயம் பெற்றார்!
யார் வீட்டுக்குள் நுழைந்து தாழிட்டுக்கொண்டாரோ அவர் அபயம் பெற்றார்!
யார் கஃபாவில் நுழைந்து கொண்டாரோ அவர் அபயம் பெற்றார்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த இடத்தைவிட்டும் அபூ சுஃப்யான் (ரலி) நகர்ந்தும் அப்பாஸ் (ரலி) அவர்களை அழைத்து நபி (ஸல்) அவர்கள்
அப்பாஸே! பாதைகள் பிரிந்து செல்கிற முக்கிய மலைப் பள்ளத்தாக்கில் அபூ சுஃப்யானை நிறுத்தி வையுங்கள் அல்லாஹ்வின் படையை அவர் பார்க்கட்டும் என்று கூறினார்கள்.
அதுபோன்றே அப்பாஸ்  (ரலி) அவர்கள் அபூ சுஃப்யான் (ரலி) அவர்களை நிறுத்திவைத்தார்கள்.

நபித் தோழர்கள் ஒவ்வொரு குழுக்களாக அணிவகுத்துச் சென்ற அந்த அணிவகுப்பை கண்ணுற்ற அபூ சுஃப்யான் (ரலி)
இவர்கள் யார்?
சுலைம் கோத்திரம்
இவர்கள் யார்?
முஜைனா
இப்படி கேட்டு, அப்பாஸ் (ரலி) பதில் கூறும்போது, எனக்கு என்ன நேர்ந்தது? எனக்கும் முன்பாகவே இவர்களெல்லாம் வந்து விட்டார்களே! என்று அபூ சுஃப்யான் (ரலி) கூறிக்கொண்டிருந்தார்.
அந்நேரத்தில் அந்த அணிவகுப்பில்,
நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிகள், முஹாஜிர்கள் புடைசூழ ஆயுத மேந்தி அணிவகுத்து வந்து கொண்டிருந்தனர்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆயுதங்களாகவே தெரிந்தது
அப்பாஸே! சுப்ஹானல்லாஹ்! இவர்கள் யார்?
இக்குழுவில் முஹம்மத் (ஸல்) அவர்களும் முஹாஜிர் மற்றும் அன்ஸார் தோழர்களும் செல்கிறார்கள் என்றார் அப்பாஸ் (ரலி)

நிச்சயமாக! இவர்களை யாராலும் எதிர்கொண்டு வெல்லமுடியாது!. அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம் சகோதரனின் மகனின் ஆட்சி மிகப்பிரமாண்டமே! என்றார்.
அதற்கு அப்பாஸ் (ரலி)
            அபூ சுஃப்யானே!
            இதுதான் நபித்துவமாகும் என்றார்கள்.
            ஆம். விலங்கிக் கொண்டேன் என்றார் அபூ சுஃப்யான் (ரலி) அப்படியானால் உன் சமூகத்தாரின் வெற்றியும் அங்குதான் இருக்கிறது என்றார்கள் அப்பாஸ் (ரலி) அவர்கள்.
நூல் தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம் பக்கம்
முஸ்லிம்களையும், முஹம்மத் (ஸல்) அவர்களையும் துன்புறுத்திக் கொண்டிருந்த ஒருவர்,
இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று முணைப்புடன் செயல்பட்ட ஒருவர்
எவ்வித சாட்சியும் இன்றி, நிராயுதபாணியாய் கொண்டுவந்து நிறுத்தப்பட்டபோது,
அகிலத்தின் அருட்கொடை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட விதம் எவ்வளவு விந்தையானது?
நபி (ஸல்) அவர்கள் தாம் போதித்த போதனையை நிலை நிறுத்துவதில் எந்தளவு உறுதியாய் இருந்தார்கள்!
புரட்சியே வெற்றியின் வழி என்றார் ரஷ்யாவின் லெனின் தனது கொள்கையை பரப்பிட ஏதுவாக சில கோட்பாடுகளை வரையறுத்தார்.

1.     முதலாளித்துவத்திற்கெதிராக பாட்டாளி வர்க்கத்தை ஒன்று திரட்டுவது
2.     முழுத்திறனையும் அதற்கென செலவிடுவது.
3.     நடைமுறை அரசியலில் சில மாற்றங்களை கொண்டு வருவது.
4.     திருமணம், குடும்பம் எனும் தனி மனித சித்தாந்தத்தை தகர்த்தெறிவது.
மக்களிடம் பெரும் வரவேற்கு கிடைத்தது. சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்று மகிழ்ந்தனர் மக்கள்.
பூரித்துப் போனார் லெனின். ஆட்சியமைத்துக் காட்டினார்.
1.     குழந்தை, முதியோர்களை அரசே கண்காணிக்கும்.
2.     விரும்பும் ஆண் அல்லது பெண், விரும்புகிற பெண் அல்லது ஆணை திருமணம் ஒப்பந்தம் இன்றி சேர்ந்து வாழலாம்.
என்று சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.
ஆனால், நீண்ட காலம் நீடிக்கவில்லை சோவியத் யூனியன் எனும் வல்லரசு ரஷ்யாவின் அரசியல் பயணம்.

வெகு சீக்கிரமே வந்தது தொடர் பயணத்துக்கு முற்றுப்புள்ளி ஆம்! சிதருண்டு போன கண்ணாடி போல் சோவியத் யூனியன் 35-க்கும் மேற்பட் நாடுகளாக சிதறிப் போயின.
எந்த புரட்சியால் சிம்மாசனம் ஏறினாரோ அதே புரட்சியால் அறியணையிலிருந்து இறக்கிவிடப்பட்டார் லெனின்.

செல்வந்தர்கள் ஏழைகளை அரவணைக்க வேண்டும். ஒருபோதும் கைவிடலாகாது என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

ஜகாத் எனும் கட்டாய தர்மம், ஸதக்கா எனும் மேல் மிச்சமான தர்மத்தை செல்வந்தர்கள் மீது விதித்து ஏழைகள் இல்லா ஓர் உலகத்தை தாங்கள் வாழும் காலத்திலேயே உருவாக்கிக் காண்பித்தார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

அல்லாஹ் கூறுகின்றான்:
நபியே! அவர்களின் செல்வத்திலிருந்து ஜகாத் நிதியை (வசூல் செய்து) கைப்பற்றுவீராக!                                                                         அல்குர்-ஆன்: 9:103

அல்லாஹ்வின் வழிகாட்டலுக்கேற்ப மாநபி (ஸல்) அவர்கள் ஜகாத் பணத்தை வசூல் செய்து உரியவர்களிடம் ஒப்படைத்த எண்ணற்ற செய்திகள் ஹதீஸ் கிரந்தங்களில் காணப்படுகின்றன.

நபிகளாரின் மறைவுக்குப்பின் ஹிஜ்ரி99-ல் கலீபாவான உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) உலகமே வியக்கும் வண்ணம் ஆட்சி புரிந்தார்கள்.

ஒருமுறை கலீபா உமர் (ரஹ்) அவர்கள் தமது ஈராக்கின் ஆளுநர் அப்துல் ஹமீது இப்னு அப்துர் ரஹ்மான் என்பவருக்கு கடிதம் எழுதினார்கள்.

மக்களுக்கு கொடுக்க வேண்டிய மாதாந்திர உதவித் தொகையை ஜகாத் நிதியிலிருந்து கொடுத்து விடுங்கள்அதற்கு ஆளுநர் நான் கொடுத்து விட்டேன்! ஆயினும் ஏராளமான நிதி மீதமிருக்கிறது என பதில் கடிதம் அனுப்பினார்.
கடனாளிகளுக்கு கொடுத்துவிடுங்கள் என்று இன்னொரு கடிதம் அனுப்பினார்கள் அதற்கு ஆளுநர்.
அப்படிக் கொடுத்து விட்டேன்! ஆயினும் ஏராளமான நிதி மீதமிருக்கிறது என்று பதில் கடிதம் அனுப்பினார்.

திருமண மஹர் தொகை கொடுக்க சிரமப்படுபவருக்கு கொடுத்துவிடுங்கள் என்றொரு கடிதம்,
அதற்கு ஆளுநர், அதுபோக இன்னும் மீதமிருக்கிறது என்று பதில் கடிதம்.

இறுதியாக கலீஃபா உமர் (ரஹ்) அவர்கள் ஜிஸ்யா வரி செலுத்தக் கடமைப்பட்ட மாற்று சமயத்தவர்களில் யாராவது விவசாயத்தொழில் செய்ய முற்பட்டால் அவர்களுக்குத் தேவையான தொகையைக் கருவூல நிதியிலிருந்து கொடுத்து விடுங்கள் என்று பரிந்துரைத்தார்கள்.
நூல் அல்-அம்வால்
            நன்றி வறுமையின் கோரமும் இஸ்லாத்தின் தீர்வும்எனும் தமிழ் நூலிலிருந்து…..

ஒரு நூற்றாண்டு முடிவடைந்தும் கூட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கொள்கையும், கோட்பாடுகளும் காணாமல் போய்விடவில்லை
அறியாமைக் காலத்தில் நான்கு வகையான திருமண நடைமுறைகளை பின்பற்றினர் அரபுலக மக்கள்.

1.      இன்று மக்களிடையே நடைமுறையிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்.
2.      ஒருவர் தம் மனைவியிடம்மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்தவுடன் இன்ன நபருடன் படுக்கையை பகிர்ந்துகொள் என்பார் கருத்தரித்துவிட்டால் மீண்டும் சேர்த்துக்கொள்வார். ஆரோக்கியமான குழந்தை வேண்டுமென விரும்பிய இவ்வாறு செய்து வந்தனர்.
3.      பத்து பேருக்கும் குறைவான ஒரு குழுவினர் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரே பெண்ணுடன் உறவு கொள்வார்கள். கருத்தரித்து குழந்தை பிறந்தபின் இது இன்னாரின் குழந்தையே என ஒருவரை சுட்டிக் காட்டி அனைவரையும் ஒன்றுகூட்டிச் சொல்வாள். பின்னர் அக்குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்படும்
4.      பலர் ஒரு பெண்ணுடன் உறவு கொள்வார்கள். கருத்தரித்து குழந்தையை பிரசவித்துவிட்டால் குழந்தையின்அங்க அடையாளங்களை வைத்து, முகக்குறி நிபுணர்களை கொண்டு ஆராய்ந்து தந்தையை முடிவு செய்து குழந்தை ஒப்படைக்கப்படும் அவன் மறுக்கமாட்டான் அவனின் மகன் என்றே மக்கள் அழைப்பார்கள்.
நூல்: ரஹீத்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருமண சட்ட வசனங்களான 4:45, 4:19, 19:23, 2:221, 24:3, 24:26, 24:32,32.

இவைகளை கொண்டு அறியாமைக் காலத் திருமணங்களை தகர்த்தெறிந்துவிட்டார்கள்.
ஒருமனிதனின் வெற்றிக்கு திருமண வாழ்வுஅதுவும் முறையான வாழ்வே துணையாக அமையும் என்று வழியுறுத்திக் கூறி மக்களை ஒருமுகப்படுத்தினார்கள்.

வட்டியில்லா பொருளாதாரம், வீண் விரயமில்லா செலவினங்கள் கஞ்சத்தனமில்லை சிக்கனம் என்று மிகப் பெரும் கோட்பாடுகளை வரையறுத்தார்கள் மாநபி (ஸல்) அவர்கள்.

ஒருவரையொருவர் நேருக்குநேர் தாக்கிக் கொணடு புரட்சி செய்து வெற்றி பெறமுடியாது, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழும் வாழ்க்கையில்தான் வெற்றிக்கான வழி உள்ளது என்பதை உலகிற்கு உணர்த்தியவர்கள் உத்தமர் (ஸல்) அவர்கள்.

அபூ சுஃப்யானிடம் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தி பார்ப்போம்.

இது தான் நபித்துவ மாகும்.

ஆக, தாங்கள் வாழ்கிற போது தாங்கள் சொன்னதையே செய்தார்கள்.
தங்களுக்குப்பின் அவர்கள் சொன்னதை செய்ததை நிலை நிறுத்துகிற சீடர்களையும், சமுதாயத்தையும் உருவாக்கி வரலாற்றில் முழு வெற்றி கண்ட முழு மனிதராக வாகாய் ஜொலித்துக் கொண்டிருக்கின்றார்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

ஆக, சொன்னதை செய்வதிலும், சொல்வதை செய்கிற ஒரு சமுதாயத்தை உருவாக்கி காட்டியதிலும் முழு வெற்றிபெற்ற வீரராக வலம் வருகிறாரகள் முஹம்மத (ஸல்) அவர்கள்.
நபி (ஸல்) அவர்களின் மீது நேசங் கொண்டவராகவும்,
அவர்களின் வழியில் நடக்கும் நற்பேறுபெற்றவர்களாகவும் அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக! ஆமீன்!

வஸ்ஸலாம்

இன்ஷா அல்லாஹ்…..

நமது அடுத்த பதிவு
ஒரு வார இடைவெளிக்குப் பின்னர்
வெளியிடப்படும்.
துஆ செய்யுங்கள்
                        அன்புடன்
                        N.S.M. பஷீர் அஹ்மத்  (உஸ்மானி)